பக்காத்தான் மாட் சாபுவை ஆதரிக்கிறது

கம்யூனிஸ்ட்களை வீரர்கள் எனச் சித்தரிப்பதாகக் கூறப்படும் உரையை நிகழ்த்தியதற்காக பிஎன்-னின் கடும் விமர்சனத்துக்கு இலக்காகியுள்ள பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபுவை பக்கத்தான் ராக்யாட் தற்காத்துள்ளது.

மாட் சாபு என சுருக்கமாக அழைக்கப்படும் அவர் சொன்ன கருத்துக்களை அம்னோவும் பிஎன் -னும் முற்றிலும் திரித்துக் கூறுவதாகவும் அது சாடியது.

புக்கிட் கெப்போங் சம்பவத்தில் கம்யூனிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுக்கு புகழ்மாலை சூட்டிய கம்யூனிஸ்ட் அனுதாபி என பிஎன் கட்டுக்குள் இருக்கும் ஊடகங்கள் சித்தரிக்க முயலுவதாக பாஸ், பிகேஆர், டிஏபி ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் விடுத்த கூட்டறிக்கை தெரிவித்தது.

“அந்த இரண்டு கூற்றுக்களும் உண்மையற்றவை. மாட் சாபு அந்த நோக்கத்தில் எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என நாங்கள் நம்புகிறோம்.”

“அம்னோ தலைவர்களும் ஊடகங்களும் மேற்கொண்டு வருகிற பொறுப்பற்ற திசை திருப்பும் நடவடிக்கைகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்,” என பாஸ் மத்தியக் குழு உறுப்பினர் சுல்கெப்லி அகமட், பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் நாஸ்மி நிக் அகமட், டிஏபி அனைத்துலகப் பிரிவுத் தலைவர் லியூ சின் தொங் ஆகியோர் கையெழுத்திட்டுள்ள அந்த அறிக்கை கூறியது.

மாட் சாபு ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை நியாயமற்றது, பக்காத்தான் தோற்றத்தைப் பாதிக்கும் என்பதால் அதனை மீட்டுக் கொள்ளுமாறு டிஏபி தலைவர் கர்பால் சிங் நேற்று வேண்டுகோள் விடுத்தார்.

‘மாட் சாபு சந்தேகத்தை மட்டுமே கிளப்பினார்’

மாட் சாபு தமது உரையில் கம்யூனிஸ்ட்களை குறிப்பிடவே இல்லை. வரலாற்று நிகழ்வை எடுத்துக் காட்ட அவர் மேற்கொண்ட முயற்சி தவறாக விளக்கப்பட்டுள்ளது.”

“இந்த நாட்டின் வரலாற்று நிகழ்வுகள் மீது சட்டப்பூர்வமான ஐயத்தைக் கிளப்புவதற்கு மாட் சாபு கொண்டுள்ள நோக்கம் பற்றி நாங்கள் கேள்வி எழுப்ப விரும்பவில்லை என நாங்கள் உறுதி கூறுகிறோம்.”

“என்றாலும் உத்துசான் மலேசியாவின் பகைமை எண்ணம் கொண்ட ஈவிரக்கமற்ற செய்திகள் குறித்து நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். அந்த ஏடு தீய நோக்கத்துடன் கற்பனையான வாதங்களுடன் ஜோடிக்கப்பட்ட தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது,” என அவர்கள் கூறினர்.

ஒவ்வொரு மெர்தேகா தினத்திலும் அம்னோ தனது சுய பெருமையை பறை சாற்றுகிறது எனக் கூறும் சர்ச்சைக்குரிய உரையை பினாங்கில் உள்ள தாசெக் குளுகோரில் முகமட் சாபு நிகழ்த்தினார்.

சுதந்திரத்துக்குப் பங்காற்றிய அம்னோ அல்லாத சக்திகளை அம்னோ புறக்கணித்துள்ளது என்றும் புக்கிட் கெப்போங் சம்பவத்தை அது பயன்படுத்துகிறது என்றும் அவர் சொன்னார்.

மெர்தேகா தினம் நெருங்கும் போது அந்தச் சம்பவம் மீதான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளியேற்றப்படுகின்றன.

புக்கிட் கெப்போங்கை தாக்கியவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என மாட் சாபு தமது உரையில் குறிப்பிட்டார். காரணம் அப்போதைய போலீசார், பிரிட்டிஷ்காரர்களுக்கு சேவை செய்தனர்.

கிளர்ச்சிக்காரர்களுக்கு முகமட் இந்ரா என்பவர் தலைமை தாங்கியதாகவும் அவர் தகவல் வெளியிட்டார்.

“அவர் மலாய்க்காரர். ஆனால் அது வரலாற்றுப் புத்தகங்களில் காணப்படவில்லை,” என்றார் மாட் சாபு

வடி கட்டப்பட்ட வரலாறு

அம்னோ மற்றும் அதன் கூட்டாளிகளும் ஆற்றிய பங்கை மட்டுமே அங்கீகரிக்கும் வரலாறு மலேசியர்களுக்கு வழங்கப்படுகிறது என அந்த மூன்று பக்காத்தான் தலைவர்களும் கூறினர்.

“புர்ஹானுடின் அல் ஹெல்மி, அகமட் போஸ்தமாம், இஷாக் ஹாஜி முகமட் போன்ற பலருக்கு என்ன நேர்ந்தது?

“கேஎம்எம் என்ற மலாய் இளைஞர் சங்கம், பிகே எம் எம் என்ற தேசிய மலாயா மலாய்க் கட்சி ஆகிய அமைப்புக்கள் பற்றி எதுவும் கூறப்படவில்லை. அவை உண்மையில் மலாய் அரசியல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்த முன்னோடிகள்.”

“1957ம் ஆண்டு மெர்தேகா கிடைப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் ‘மக்கள் அரசியலமைப்பு’ என்னும் ஆவணத்தை தயாரித்த அகில மலாயா கூட்டு நடவடிக்கை மன்றம் (AMCJA), மக்கள் சக்தி மையம் (PUTERA) ஆகியவை பற்றி எதுவும் தெரிவதில்லை.”

“அந்த அமைப்பின் முயற்சி குறிப்பிடத்தக்கது. ஏனெனில் நாட்டின் உண்மையான பல இன கூட்டணிக்கு அது வித்திட்டது,” என அவர்கள் கூறினர்.

நாடு சுதந்திரம் அடைந்ததற்கு அம்னோ தலைமையிலான கூட்டணியின் முயற்சி மட்டும் காரணமல்ல. அந்த முயற்சி பல கோணங்களில் பலதரப்பட்ட மக்களால் மேற்கொள்ளப்பட்டது.”

தோக் ஜாங்குட், அப்துல் ரஹ்மான் லிம்போங், தாக் கூ பாலோ போன்ற காலனித்துவ எதிர்ப்புப் போராட்ட வீரர்கள் புரிந்துள்ள தியாகங்களுக்கும் இடம் கொடுக்கப்பட வேண்டும்.

“நமது வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் ஒரிரு அத்தியாயங்கள் மட்டும் காணாமல் போகவில்லை. ஒர் இணையான முழுமையான வரலாறு அதிகாரத்துவ நினைவலைகளிலிருந்து வெற்றிகரமாக அழிக்கப்பட்டுள்ளது.”

“நடப்பு வரலாற்று கண்ணோட்டங்களை எதிர்ப்பதற்கு மாட் சாபு தொடங்கியுள்ள முயற்சி தவறானது அல்ல என நாங்கள் முடிவாகக் கூறுகிறோம். அம்னோ/பிஎன் அரசாங்கத்தின் பிரச்சார எந்திரத்தால் பல ஆண்டுகளாக மலேசியர்களுக்கு உண்மைகள் திரித்துக் கூறப்பட்டதே தவறாகும்.”

TAGS: