பொதுத் தேர்தலுடன் ஒரே சமயத்தில் தங்கள் கட்டுக்குள் இருக்கும் மாநிலங்களிலும் தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதை முடிவு செய்ய எதிர்த்தரப்பு பக்காத்தான் ராக்யாட் கூட்டணித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை சந்திக்கின்றனர்.
அந்தக் கூட்டம் கோலாலம்பூரில் நிகழும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அறிவித்தார்.
1.3 மில்லியன் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளத் திருத்தத்தை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளது பொதுத் தேர்தல் விரைவில் நிகழும் என்பதற்கான அறிகுறி என அவர் சொன்னார்.
ஏப்ரல் 12ம் தேதி யாங் டி பெர்துவான் அகோங் அரியணை அமரும் விழாவுக்குப் பின்னர் அல்லது பெரும்பாலும் மே மாதம் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என லிம் எண்ணுகிறார்.
இந்தோனிசியா-மலேசியா-தாய்லாந்து வளர்ச்சி முக்கோணைப் பகுதியில் உள்ள முதலமைச்சர்கள், ஆளுநர்கள் கூட்டத்தை மலாக்காவில் நேற்று நிறைவு செய்து வைத்த பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.
தாம் தொடர்ந்து பினாங்கில் போட்டியிடுவதை உறுதி செய்த பினாங்கு முதலமைச்சருமான லிம், கடந்த தேர்தலில் வெற்றி பெற்றி எல்லா இடங்களையும் தக்க வைத்துக் கொள்வதற்கு டிஏபி கடுமையாக உழைக்கும் என்றார்.
இவ்வாண்டு முற்பகுதியில் கூட்டரசு அரசாங்கம் நாடாளுமன்றத்தைக் கலைத்தால் சிலாங்கூர் அரசாங்கம் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்கப் போவதில்லை என அதன் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதி கூறினார்.
பிகேஆர், டிஏபி, பாஸ் ஆகியவற்றை தோழமைக் கட்சிகளாகக் கொண்ட பினாங்கு, கெடா, கிளந்தான் ஆகியவற்றையும் கடந்த 2008 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கின்றன.
பெர்னாமா