மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவை நோக்கிக் காலணியை விட்டெறிந்த இமாம் நீதிமன்றத்தை அவமதித்து விட்டார் என்று முடிவுசெய்து கூட்டரசு நீதிமன்றம் அவருக்கு ஒராண்டு சிறைத் தண்டனை என்று அளித்துள்ள தீர்ப்பு மிதமிஞ்சியதும் பொருத்தமற்றதுமாகும் என்று பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் சாடியுள்ளார்.
ஹொஸ்லான் ஹுசேனைத் தற்காத்துப் பேசிய சுரேந்திரன் கூட்டரசு நீதிமன்றம் வழக்கைப் பரிவுடன் கவனிக்கத் தவறிவிட்டது என்றார்.
“அச்செயலைப் புரிந்த வேளையில் இமாம் ஹொஸ்லான் அவருக்காக வாதாட ஒரு வழக்குரைஞரைப் பெற்றிருக்கவில்லை,மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருந்தார். ஏழு பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக போராடிக்கொண்டிருக்கும் ஒரு தந்தை அவர்.
“ கடும் எச்சரிக்கை அல்லது அபராதத்துடன் வழக்கை முடித்துக்கொண்டிருக்கலாம்”, என்றாரவர்.
ஒரு வழக்கு தொடர்பில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக அவர் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து ஹொஸ்லான், மலாயா தலைமை நீதிபதி சுல்கிப்ளி அஹ்மட் மகினுடியைத் தலைவராக் கொண்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழுவை நோக்கிக் காலணிகளை விட்டெறிந்தார்.
அச்சம்பவத்தை விசாரணை செய்த அதே நீதிபதிகள் குழு, நீதிமன்றத்தின் கெளரவத்தைக் காக்க ஹொஸ்லான் தண்டிக்கப்பட்ட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
மக்கள் நம்பிக்கை குறைந்துவிட்டது
நீதிமன்றம் அறநெறிகளை நிலைநிறுத்துவதன்வழிதான் கெளரவத்தைக் காக்க வேண்டுமே தவிர மக்களைச் சிறைக்கு அனுப்புவதன்வழி அல்ல என்று சுரேந்திரன் (இடம்) குறிப்பிட்டார்.
நீதித்துறை தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர், நீதிபதிகள் சுதந்திரமாக செயல்படுவதில்லை, மலேசியர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில்லை என்ற கருத்துப் பரவியிருப்பதால் அதன்மீது மக்களின் நம்பிக்கை நலிந்து விட்டது என்றாரவர்.
“நம்பிக்கையும் மதிப்பும் குறைந்து போவதுதான் காலணி-எறியும் சம்பவங்களுக்கு இட்டுச் செல்கின்றது”, என்றவர் சொன்னார்.
இதனிடையே, பாஸ் இளைஞர் பகுதி, ஹொஸ்லான் சிறையில் இருக்கும்போது அவரின் குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதில் உதவப்போவதாக அறிவித்துள்ளது.
நீதித்துறை சாமான்ய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்ற ஆத்திரம்தான் காலணி-எறியும் செயலாக வெளிப்பட்டது என்று பாஸ் விளம்பரப் பிரிவுத் தலைவர் ரிட்வான் முகம்மட் நோர் கூறினார்.