கல்வி அமைச்சு, ஆசிரியர்களின் அரசியல்சார்புப் பற்றித் தகவல் சேகரிக்குமாறு மாநில கல்வித் துறைகளுக்கு உத்தரவு பிறப்பித்ததில்லை என்கிறார் கல்வி துணை அமைச்சர் புவாட் ஸர்காஷி.
தாவாவ் கல்வித் துறை அதற்கான கடிதத்தை வெளியிட்டிருப்பது பற்றி வினவியதற்கு, அப்படி ஒரு கடிதத்தைத் தாம் பார்த்ததில்லை என்றும் தமக்குத் தெரிய அப்படி ஓர் உத்தரவு பிறக்கப்பட்டதில்லை என்றும் புவாட் கூறினார்.
“அமைச்சு அப்படி ஓர் உத்தரவைப் பிறப்பித்ததில்லை. அப்படி ஒரு கடிதம் பற்றியும் எனக்குத் தெரியாது.தாவாவ் கல்வித் துறையைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்”, என்றாரவர்.
தாவாவ் கல்வி அதிகாரி தர்மான் ஷா அஸாகிலைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.அவர் “அவசரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டிருப்பதாக” பதில் வந்தது. அவர் மார்ச் 1-இல், அப்படி ஒரு கடிதத்தைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்பட்டது.
அக்கடிதம் முதலில் Ameno World வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு இப்போது இணையத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறது.அது, ஆசிரியர்களின் அரசியல்சார்பு பற்றிய தகவல்களைத் திரட்டி வகைப்படுத்துமாறு பள்ளிமுதல்வர்களையும் தலைமை ஆசிரியர்களையும் பணிக்கிறது.
ஆசிரியர்கள் அரசாங்கத்தை முழுமையாக ஆதரிப்பர்களா, ஓரளவுக்கு ஆதரிப்பவர்களா, ஓரளவு எதிர்ப்பவர்களா, முழு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களா என்பதைப் பள்ளித்தலைவர்கள் வகைப்படுத்த வேண்டும்.
அதற்கான உத்தரவை சாபா கல்வித் துறை பிப்ரவரி 29 நடந்த ஒரு கூட்டத்தில் பிறப்பித்தது என்று அக்கடிதம் கூறிற்று.
சாபா கல்வித் துறையுடன் தொடர்புகொள்ளும் முயற்சியும் பயன்தரவில்லை.
ஆனாலும், சாபா கல்வித் துறையுடனும் தர்மான் ஷாவுடனும் தொடர்புகொள்ள மலேசியாகினி தொடர்ந்து முயன்று வரும்.