எதிர்வாதம் புரியுமாறு முன்னாள் மசீச தலைவருக்கு ஆணை

போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி ( PKFZ )மீது அரசாங்கத்தை ஏமாற்றிய குற்றச்சாட்டுக்கள் மீது எதிர்வாதம் புரியுமாறு முன்னாள் போக்குவரத்து அமைச்சர் லிங் லியாங் சிக்-கிற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

68 வயதான முன்னாள் மசீச தலைவருக்கு எதிராக வழக்கு இருப்பதை அரசு தரப்பு வெற்றிகரமாக மெய்பித்திருப்பதாக நீதிபதி அகமாஅடி அஸ்னாவி சொன்னார்.

அந்த PKFZ திட்டத்துக்கான நிலத்தின் கொள்முதல் விலை மீது ஆண்டுக்குக் கூடுதலாக 7.5 விழுக்காட்டு வட்டி விதிக்கப்பட்டுள்ளதை அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதீரின்

அமைச்சரவையிடமிருந்து மறைத்ததின் மூலம் அரசாங்கத்தை ஏமாற்றியதாக லிங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சொத்து மதிப்பீட்டு துறை அந்த நிலத்தின் விலையை ஒரு சதுர அடிக்கு 25 ரிங்கிட் என்ற அடிப்படையில் வட்டி உட்பட மொத்தம் 1.09 பில்லியன் ரிங்கிட் என நிர்ணயம் செய்திருந்தது.

2010ம் ஆண்டு ஜுலை மாதம் 29ம் தேதி குற்றவியல் சட்டத்தின் 418வது பிரிவின் கீழ் லிங் மீது முதலில் குற்றம் சாட்டப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஏழாண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

கூடுதல் வட்டி விகிதம் பற்றிய தகவலை அமைச்சரவையிடமிருந்து வேண்டுமென்றே மறைத்ததற்காக மேலும் இரண்டு மாற்றுக் குற்றசாட்டுக்களையும் லிங் எதிர்நோக்குகிறார்.

அறியாமை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது

அரசாங்கம் அந்த நிலத்துக்கு அதன் மதிப்பான 1.09 பில்லியன் ரிங்கிட்டைக் காட்டிலும் கூடுதலாகக் கொடுக்க வேண்டும் என்பது லிங் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் என நீதிபதி தமது 83 பக்க தீர்ப்பில் கூறினார். ஏனெனில் அவர் ஏற்கனவே நடந்த கூட்டம் ஒன்றில் அவருக்கு அது பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தது என்றார் நீதிபதி. ஆனால் அது பற்றி அமைச்சரவைக்கு தெரிவிக்க  லிங் தவறி விட்டார்.

“அந்த குறிப்பிட்ட விலையை அங்கீகரிக்குமாறு குற்றம் சாட்டப்பட்டவர் வேண்டுமென்றே அரசாங்கத்துக்கு ஊக்கமூட்டினார் எனக் கூற நான் தயங்கவில்லை. அந்த 7.5 விழுக்காடு வட்டி பற்றி தெரிந்திருந்தால் அமைச்சரவை அதனை ஏற்றுக் கொண்டிருக்காது,” என்றார் அவர்.

லிங்-கைப் போன்ற கல்வித் தகுதியும் பதவியும் உடைய ஒருவர் தமக்கு தவறான தகவல் கொடுக்கப்பட்டு விட்டது எனக் கூறி பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது என்றும் அகமாடி சொன்னார்.

“அமைச்சரவை உறுப்பினர் என்ற முறையில் அந்த நிலத்தின் உண்மையான விலையை அமைச்சரவைக்குத் தெரிவிப்பது அவரது பொறுப்பு,” என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

“அந்த 7.5 விழுக்காடு வட்டி பற்றி தெரிவிக்க தவறியதின் மூலம் அது அரசாங்கத்துக்கு இழப்பை ஏற்படுத்தும் என்பது லிங்-கிற்குத் தெரிந்திருக்க வேண்டும்,” என்றார் அவர்.

2002ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதிக்கும் நவம்பர் 6ம் தேதிக்கும் இடையில் புத்ராஜெயாவில் பெர்டானா புத்ரா கட்டிடத்தில்  நான்காவது மாடியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் லிங் அந்தக் குற்றங்களைப் புரிந்ததாக கூறப்பட்டது

அரசு தரப்பு பிரதைவாதித் தரப்பு அழைப்பதற்கு மொத்தம் 113 சாட்சிகளை வழங்க முன் வந்துள்ளது.

விசாரணை ஜுன் 18 முதல் 22 வரையிலும் ஜுலை 2 முதல் 5 வரையிலும் ஜுலை 10 முதல் 13 வரையிலும் 13 முதல் 16 வரையிலும் நடைபெறும்.