கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக், தமது நிர்வாகத்தை மேற்பார்வையிடுவதற்கு அமைக்கப்பட்டுள்ள பாஸ் மத்திய தலைமைத்துவத்தின் நடவடிக்கைக் குழுவை சாடியுள்ளார்.
மாநிலத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்ற முறையில் தமது அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அதற்கு உரிமை இல்லை என்றார் அவர்.
இவ்வாறு அவர் சொன்னதாக மலாய் நாளேடு சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த அதிகாரங்கள் மாநில அரசமைப்பில் எழுதப்பட்டுள்ளன. ஆகவே அரசாங்க விவகாரங்களில் தலையிட அதற்கு உரிமை இல்லை என்றும் அஜிஸான் சொன்னார்.
“மாநிலத்தில் நாம் மாநில அரசமைப்பைப் பின்பற்ற வேண்டும். என்னைப் பொறுத்த வரையில் நடவடிக்கைக் குழு தனிப்பட்ட முறையில் எனக்கு ஆலோசனை மட்டுமே வழங்க முடியும். எனக்கு யாரும் யோசனை கூறலாம்,” என அவர் குறிப்பிட்டார்.
கெடா பாஸ் ஆணையாளருமான அஜிஸானுக்கும் அவரது தலைமைத்துவத்தை ஆட்சேபித்து ஆட்சி மன்ற உறுப்பினர் பதவியை மீண்டும் ஏற்க மறுத்த பாஸ் துணை ஆணையாளருமான பாஹ்ரோல்ராஸி ஸாவாவிக்கும் இடையில் மூண்ட தகராற்றுக்கு அமைதித் தீர்வு காணப்பட்டுள்ளதாக பாஸ் தலைமைத்துவம் அறிவித்த ஒரு வார காலத்துக்குள் அஜிஸானுடைய கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
அந்தத் தீர்வின் கீழ் தமது நிர்வாகத்தை மேற்பார்வையிடுவதற்கு நடவடிக்கைகக் குழு ஒன்றை அஜிஸான் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதே வேளையில் பாஹ்ரோல்ராஸியும் அவரது சகாவான இஸ்மாயில் சாலேயும் மாநில அரசாங்கத்தை புறக்கணிப்பதை நிறுத்திக் கொண்டு ஆட்சி மன்ற உறுப்பினர்களாக மீண்டும் நியமனம் பெறுவதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
அன்வார் மரியாதை நிமித்தம் அஜிஸானைச் சந்தித்தார்
என்றாலும் அந்தக் குழுவின் அமைப்பு அதன் பணிகள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படாததால் அது குறித்து மேலும் கருத்துக் கூற அஜிஸான் மறுத்து விட்டதாக சினார் ஹரியான் செய்தி மேலும் தெரிவித்தது.
இதனிடையே எதிர்த்தரப்புத் தலைவரும் பிகேஆர் மூத்த தலைவருமான நேற்று அஜிஸானை மரியாதை நிமித்தம் சந்தித்தார். சிலாங்கூரில் மந்திரி புசாருக்கான பொருளாதார ஆலோசகர் என்ற தமது பணிகளைப் போன்று நடவடிக்கைக் குழுவின் பணிகள் இருக்கும் என அவர் பின்னர் கூறினார்,
“சிலாங்கூர் மந்திரி புசாருக்கான பொருளாதார ஆலோசகர் என்ற முறையில் அனுபவம் வாய்ந்த மற்ற கட்சித் தலைவர்களுடைய கருத்துக்களின் அடிப்படையில் நான் வெறும் ஆலோசனைகளை மட்டுமே வழங்குகிறேன். ஆனால் நான் மந்திரி புசாருடைய அதிகாரங்களை எடுத்துக் கொள்ளவில்லை,” என்றார் அவர்.