மலேசியா பெரும்பாலான இடிபி இலக்குகளை தாண்டியுள்ளது

இடிபி என்ற பொருளாதார உருமாற்றத் திட்டங்களின் முதலாம் ஆண்டு இலக்குகளை மலேசியா தாண்டி விட்டதாக பிரதமர் துறை அமைச்சர் இட்ரிஸ் ஜாலா கூறுகிறார்.

நாட்டின் மொத்த கேபிஐ என்ற முக்கிய அடைவு நிலைக் குறியீடு 129 விழுக்காட்டை எட்டி விட்டதாக அவர் சொன்னார்.

அவர் இன்று கிள்ளானில் கிரேஸ் சமூக சேவை அமைப்பு TA Enterprise Bhd-டன் இணைந்து நடத்தும் அற நிதி மய்யத்தைத் தொடக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

அந்த உருமாற்றத் திட்டங்களில் ஒன்று மொத்த தேசிய வருமானம் ஆகும். 2020க்குள் அதனை 1.7 டிரில்லியனாக உயர்த்துவது இறுதி இலக்காகும். கடந்த ஆண்டு இலக்கு 797 பில்லியன் ரிங்கிட் ஆகும்.

அந்த இலக்கையும் தாண்டி மொத்த தேசிய வருமானம் 841 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது என்று இட்ரிஸ் தெரிவித்தார்.

“தனியார் துறை முதலீடுகளைப் பொறுத்த வரையில் கடந்த ஆண்டு இலக்கு 83 பில்லியன் ரிங்கிட் ஆகும். ஆனால் நாம் சாதித்துள்ளது 94 பில்லியன் ரிங்கிட். ஆகவே நாம் தொடர்ந்து முன்னேறி வருகிறோம்.”

வேலை வாய்ப்புக்களைப் பொறுத்த அம்ட்டில் கடந்த ஆண்டு மூன்றாவது கால் பகுதி வரையில் 500,000 வேலைகள் உருவாக்கப்பட்டன. கடந்த ஆண்டுக்கான மொத்த இலக்கு 600,000 வேலைகளாகும். அடுத்த மாதம் புள்ளி விவரத் துறை 2011ம் ஆண்டு முழுமைக்குமான விவரங்களை அறிவிக்கும் என்றும் இட்ரிஸ் குறிப்பிட்டார்.

குற்றச் செயல்களைக் குறைப்பது, கிரமப் புறங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வருமானத்தை உயர்த்துவது ஆகியவை உட்பட பல அரசாங்க உருமாற்றத் திட்டங்களிலும் இலக்கைக் காட்டிலும் 131 விழுக்காடு அடையப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கடந்த ஆண்டு அமலாக்கப்பட்ட திட்டங்கள் மீது வரும் ஏப்ரல் மாதம் முழு அறிக்கையைப் பொது மக்களுக்கு விவரமாக வெளியிடுவார். அவற்றின் அமலாக்கத்தை பொது மக்கள் அதன் வழி அறிந்து கொள்ள முடியும். அடுத்து வரும் ஆண்டுகளில் என்ன செய்யப்படும் என்பதும் மக்களுக்கு தெரியும்.”

2020ம் ஆண்டு வாக்கில் மலேசியாவை உயர்ந்த வருமானத்தைக் கொண்ட நாடாக மாற்றும் இலக்கை அடைவதற்கு  அரசாங்கம் தீவிர ஈடுபாடு காட்டி பாடுபட வேண்டும் என்றும் இட்ரிஸ் குறிப்பிட்டார்.

பெர்னாமா