போலீஸ் படை முன்னாள் தலைவர் மூசா ஹசான், ஜோகூரில் ரகசியக் கும்பல் தலைவன் ஒருவனைப் பாதுகாத்ததாகக் கூறப்படுவதையும் சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) அப்துல் கனி பட்டேய்லுடன் சேர்ந்து வணிகக் குற்றப்புலன் விசாரணைத் துறை(சிசிஐடி) முன்னாள் தலைவர் ரம்லி யூசுப்பை ஒரு வழக்கில் சிக்க வைக்க சதிசெய்ததாகக் கூறப்படுவதையும் மறுத்துள்ளார்.
குழப்பத்தை உண்டுபண்ணும் உள்நோக்கத்துடன் அவ்வாறு கூறியிருக்கிறார்கள் என்றாரவர்.
“ரம்பி, ஏஜி ஆகியோரையும் என்னையும் விசாரித்தார்கள்.குற்றம் செய்யவில்லை என்று சட்டம் எங்களை விடுவித்தது. இது போதாதா, இன்னும் என்ன வேண்டும்?அவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்”, என்றவர் கூறியதாக சீன நாளேடான ஓரியெண்டல் டெய்லி நியுஸ் மேற்கோள் காட்டியுள்ளது.
“புதிய சான்றுகள் இருந்தால், அப்போதே அவற்றை முன்வைத்திருக்கலாமே, இவ்வளவு காலம்தாழ்த்தித் தெரிவிப்பது ஏன்?”
அவ்வாறு கூறுவோர்மீது மூசா (இடம்) சட்டநடவடிக்கை எடுக்கக்கூடும் என ஆங்கில செய்தித்தாளான ஸ்டார் தெரிவித்தது.
2007-இல், அவர் அப்துல் கனியுடனும் ஊழல்-எதிர்ப்பு வாரியத்துடனும்(ஏசிஏ) சேர்ந்து, ஜோகூர் ரகசியக் கும்பல் தலைவன், தெங்கு கோ என்ற பெயரில் பிரபலமாக விளங்கிய கோ செங் போ சம்பந்தப்பட்ட சாட்சியங்களை மாற்றினார் என்று நேற்று மலேசியாகினியில் வெளிவந்த செய்தி தொடர்பில் மூசா இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
கோ-வுக்கு எதிராக சாட்சியம் அளிக்கவிருந்தவர்கள் தேடிக்கண்டு பிடிக்கப்பட்டு, அப்போதைய உள்துறை அமைச்சர் ஜொகாரி பஹ்ரோமின் உத்தரவின்பேரில் கோ-மீது புலன்விசாரணை செய்த ரம்லியையும் மற்றும் அவரின் ஆள்களையும் மாட்டிவிடும் வகையில் சாட்சியமளிக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர் என்று கூறப்பட்டது.
அதன் விளைவாக ரம்லியும் அவரின் ஆள்களும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டனர். ஆனால்,கடந்த ஆண்டு அவர்கள் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஜோகாரி, ஊழலுக்காக ஏசிஏ-ஆல் விசாரிக்கப்பட்டு முடிவில் அவரும் குற்றவாளி அல்லர் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் 2007-இல், ஜோகாரி மூசாவுக்கு எதிராக,அவர் மூன்று குண்டர்களை விடுவிக்க ரிம2மில்லியன் பெற்றார் என்று போலீசில் புகார் செய்யுமாறு தம் அமைச்சுக்கு உத்தரவிட்டார்.
புகார் செய்யப்பட்ட இரண்டு வாரங்களில், அப்புகார் தொடர்பில் ஏசிஏ விசாரணை செய்ததாகவும் அதில் மூசாவை அக்குற்றச்சாட்டுடன் தொடர்புப்படுத்த எந்தத் தடயமும் இல்லை என்பது தெரிய வந்ததாகவும் அப்துல் கனி அறிவித்தார்.