தேசிய நாளன்று பிரதமர் எங்கே?

கடந்த புதன்கிழமை மலேசியா நோம்புப் பெருநாளையும் தேசிய தினத்தையும் கொண்டாடியபோது பிரதமர் நஜிப் இக்கொண்டாட்டங்களில் காணப்படவில்லை.

ஆகஸ்ட் 30 இல் இஸ்தானா நெகாராவில்  பேரரசர் அளித்த அரச ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பில் நஜிப் கடைசியாகக் காணப்பட்டார். அடுத்த நாள், அவரது தேசிய நாள் செய்தியை பேஸ்புக் மற்றும் டிவிட்டர் மூலம் வெளியிட்டார்.

நேற்று மலேசியாகினி வாசகர் ஒருவர் அவரது மின்னஞ்சலில் தற்போது பிரதமர் ஆஸ்திரேலியா, பெர்த்தில் இருப்பதாக நம்புவதாகத் தெரிவித்தார்.பிரதமர் பயன்படுத்துவதற்கான ஜெட் விமானம் புதன்கிழமை அங்கு தரையிரங்கியதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புகொண்டபோது, நஜிப்பின் உதவியாளர்கள் தேசிய தினத்தன்று பிரதமர் எங்கிருந்தார் அல்லது அவர் தற்போது வெளிநாட்டில் இருக்கிறாரா என்பது குறித்து எதுவும் வெளியிட மறுத்து விட்டனர்.

“அவர் விடுமுறையில் இருக்கிறார், மற்றவர்களைப்போல் அவரும் அடுத்த வாரம் திரும்புவார்”, என்று மட்டும் கூறிய ஓர் உதவியாளர், கடந்த புதன்கிழமை அவர் எங்கிருந்தார் என்பதை உறுதிப்படுத்த மறுத்து விட்டார்.

பிரதமர் இங்கு இருக்கிறாரா அல்லது ஆஸ்திரேலியாவில் இருக்கிறாரா என்று கேட்டதற்கு, பிரதமரின் ஊடகச் செயலாளர் தெங்கு ஷாரிபுடின் தெங்கு அஹ்மட், “அவர் விடுமுறையில் இருக்கிறார்”, என்று மூன்று முறை கூறினார்.

மலேசியாகினியை தொடர்பு கொண்ட அந்த வாசகர் அளித்த தகவல் பெர்த் இண்டர்நேசனல் ஏர்ப்போர்ட் வலைப்பதிவுகளிலிருந்து பெறப்பட்டதாகும்.

“நவம்பர் ரோமியோ1”

அந்த எவியேசன்டபுள்யுஎ வலைப்பதிவின் தகவல்படி அதன் வால்பகுதியில் 1மலேசியா சின்னம் பொரிக்கப்பட்ட ஏர்பஸ் A319-11X விமானம் புதன்கிழமை மாலை மணி 5.04 க்கு தரையிரங்கியது.

9M-NAA என்ற எண் பொரிக்கப்பட்ட அந்த விமானம் சிங்கப்பூர் சாங்கி அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

அந்த விமானம் அங்கு ஓர் இரவு இருந்தது என்றும் அந்த விமானம் “November Romeo 1 அல்லது NR1 என்ற அழைப்பு சமிஞ்ஞையைப் பயன்படுத்தியது என்றும் அந்த   எவியேசன்டபுள்யுஎ அறிக்கை கூறுகிறது. தற்செயலாக, இந்த NR என்ற எழுத்துகள் பிரதமர் பெயரின் முதல் எழுத்துகள் போன்று இருக்கின்றன.

பெர்த் விமான நிலைய அறிக்கையின்படி இந்த விமானம் இங்கு வருகையளித்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.

இந்த விமானம் ஜெட் பிரிமியர் ஒன் (ம) செண்ட். பெர்ஹாட்டிற்கு சொந்தமானதாகும். இந்த நிறுவனம் பெனர்பாங்கான் மலேசியா பெர்ஹாட்டின் துணை நிறுவனமாகும். பெனர்பாங்கான் மலேசியா பெர்ஹாட் இறுதியில் அரசாங்கத்தின் முதலீட்டு கரமான கஸானா நேசனல் பெர்ஹாட்டுக்கு சொந்தமானதாகும்!

2007 ஆம் ஆண்டில், நஜிப்பிற்கு முன்பிருந்த பிரதமர் அப்துல்லா படாவி அவரது நிருவாகம் இந்த விமானத்தை ரிம200 மில்லியனுக்கு வாங்கியதாக கூறப்பட்டதை மறுத்ததோடு பிஎம்பிதான் அதனை வாங்கும் முடிவை எடுத்தது என்று கூறினார்.

இதனிடையே, நஜிப்பின் உதவியாளர்கள் பொதுமக்கள் பிரதமரை செப்டம்பர் 18 இல் அவரது பகாங், பெக்கான் இல்லத்தில் நடக்கும் திறந்த இல்ல உபசரிப்பில் காணலாம் என்று கூறினர்.

TAGS: