எச்சரிக்கையாக இருங்கள்: அவர்கள் நீங்கள் சொல்வதை அவர்கள் ஒட்டுக் கேட்கலாம்

“மாட் சாபு அந்த நிகழ்வு குறித்து மாற்று விளக்கத்தை அளித்துள்ளார். புக்கிட் கெப்போங் தாக்குதலுக்கு மலாய்க்காரர் ஒருவர் தலைமை தாங்கினார் என்பது கூட எனக்குத் தெரியாது.”

 

 

 

பக்காத்தான் மாட் சாபுவை ஆதரிக்கிறது; திசை திருப்புவதாக பிஎன்-னைச் சாடுகிறது

பார்வையாளன்: சுதந்திரத்துக்கு பங்காற்றிய அம்னோ அல்லாத சக்திகளை அம்னோ புறக்கணித்துள்ளது என பாஸ் துணைத் தலைவர் மாட் சாபு சொல்லியிருப்பது சரியான கருத்து ஆகும்.

1950ம் ஆண்டு நிகழ்ந்த அந்த சம்பவத்தில் புக்கிட் கெப்போங்கைத் தாக்கியவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்றும் அதற்கு முகமட் இந்ரா என்ற மலாய்க்காரர் தலைமை தாங்கினார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த விவரம் நமது வரலாற்றுப் புத்தகங்களில் இடம் பெறவே இல்லை.

அந்த நேரத்தில் காலனித்துவ ஆட்சியாளர்களை விரட்டுவதற்காக மலாய், சீன கம்யூனிஸ்ட்கள் பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடினர். புக்கிட் கெப்போங்கில் உள்ள போலீசார் போன்ற காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு உதவிய எவரையும் கம்யூனிஸ்ட்கள் தாக்கினர். மலாயா மக்களை தொடர்ந்து அடிமைப்படுத்துவதற்கு பிரிட்டிஷாருக்கு உதவி செய்த புக்கிட் கெப்போங் போலீசாருக்கு பிரிட்டிஷ்காரர்கள் சம்பளம் கொடுத்தனர்.

அம்னோ அந்த வரலாற்று உண்மையை மறைத்து விட்டதை சுட்டிக் காட்டிய மாட் சாபு மீது அம்னோபுத்ராக்களுக்கு ஆத்திரம் பொங்கியுள்ளது. அம்னோ, கம்யூனிஸ்ட் பூச்சாண்டியையும் மரணமடைந்த போலீஸ்காரர்களின் இனத்தையும் பயன்படுத்தி தனது  ஏகபோக ஆதிக்கத்தில் உள்ள அச்சு, மின்னியல் ஊடகங்கள் மூலம் மாட் சாபுவை நியாயமற்ற முறையில் தாக்கிக் கொண்டிருக்கிறது.

மரணமடைந்த அனைவரும் பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரிகளாக இருந்திருந்தால் அம்னோ அந்த நிகழ்வை ஆண்டுதோறும் மெர்தேகா சமயத்தின் போது ஒளிபரப்பிக் கொண்டிருக்காது.

அடையாளம் இல்லாதவன்_3ec6: கடந்த 54 ஆண்டுகளாக மலேசிய வரலாற்றை பிஎன் திரித்துக் கொண்டிருக்கிறது. அந்த வரலாறு இப்போது அதனை மிரட்டுகிறது.

பிரிட்டிஷாருக்கு எதிராக மலாய் போராட்டக்காரர்கள் சண்டையிட்டால் அவர்கள் மலாயா சுதந்திரத்துக்காக போராடினர். ஆகவே அதில் என்ன தவறு? அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் இல்லையா? தாம் சொல்வது எல்லாம் சரி என்று டிஏபி தலைவர் கர்பால் சிங் நினைக்கிறார். ஆனால் அவர் முழுமையானவர் அல்ல.

விசுவாசமான மலேசியன்: எது சரி எது உண்மை என்பதற்கு பக்காத்தான் ராக்யாட் ஆதரவு அளித்துள்ளது நல்ல விஷயமாகும். அம்னோபுத்ராக்கள் அல்லாத மற்ற சுதந்திரப் போராளிகளையும் நமது சுதந்திரப் போராட்ட வரலாறு கருத்தில் கொள்வது அவசியமாகும்.

களைப்படைந்தவன்: பக்காத்தான் கூட்டறிக்கை கவைக்கு உதவாத முயற்சியாகும். மாட் சாபு கம்யூனிஸ்ட்கள் எனச் சொல்லவில்லை என்பது உண்மையே. என்றாலும் புக்கிட் கெப்போங் போலீஸ் நிலையத்தைத் தாக்கிய ஆயுதமேந்திய 200 பேர் கம்யூனிஸ்ட்கள் என்ற உண்மையை யாரும் மாற்ற முடியாது. அந்தத் தாக்குதல்காரர்களை அவர் பாராட்டியதிலிருந்து அது தெளிவாகிறது. அவர்கள் கம்யூனிஸ்ட்கள் இல்லை என்றாலும் அவர்கள் கோழைகள். 25 பேருக்கு எதிராக 200 பேர்.

இதில் கடுமையான விஷயம் என்னவெனில் அவர்கள் பிள்ளைகளையும் பெண்களையும் கூட கொன்றுள்ளனர். இருந்தும் நீங்கள் அவர்களுக்கு புகழாரம் சூட்டுகின்றீர்கள். அந்தக் கூட்டறிக்கையைத் தயாரித்தவர்களுக்கு- உங்கள் தோழரை நீங்கள் பாதுகாப்பது நியாயமானதுதான். ஆனால் சற்று நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்.

மைக்கல் அஞ்சலோ: நான் மாட் சாபு வீடியோவை பார்த்தேன். அவர் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. அவர் கம்யூனிஸ்ட்களை வீரர்கள் எனக் கூறவே இல்லை.

மாட் சாபு அந்த நிகழ்வு குறித்து மாற்று விளக்கத்தை அளித்துள்ளார்.  புக்கிட் கெப்போங் தாக்குதலுக்கு மலாய்க்காரர் ஒருவர் தலைமை தாங்கினார் என்பது கூட எனக்குத் தெரியாது. அது ஆர்வத்தைத் தூண்டும் விஷயமாகும். அந்த நேரத்தில் போலீசார், பிரிட்டிஷ் காலனித்துவப் போலீசார் ஆவர்.

பையுவன்செங்: நீங்கள் கம்யூனிஸ்ட்களை அவ்வளவு வெறுத்தால் சீனா, வியட்னாம் ஆகியவற்றுடன் உறவுகளை துண்டித்துக் கொள்ளுங்கள் அவற்றுடன் வர்த்தம் செய்ய வேண்டாம்.

எல்லாம் கபட நாடகம். பிஎன் என்ன சொன்னாலும் கம்யூனிஸ்ட்களும் மலாயாவின் சுதந்திரத்துக்குப் பங்காற்றியுள்ளனர். நீங்கள் குகூல் இணையத் தளத்துக்கு சென்றால் அதனைப் படிக்கலாம்.

லாக்கியா: 13வது பொதுத் தேர்தல் நெருங்குவதால் பக்காத்தான் தலைவர்கள் மிகவும் எச்சரிக்கையாகப் பேச வேண்டும். பிஎன் கழுகுக் கண்கள் உங்களை- நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளையும் உங்கள் நடவடிக்கைகளையும்- உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும். பிஎன் அந்த வார்த்தைகளையும் நடவடிக்கைகளையும் பொது மக்களுக்குத் திரித்துக் கூறி விடும்.

TAGS: