முதலமைச்சர் லிம் குவான் எங்மீது பினாங்கு பிஎன் தலைவர்கள் கடும் கோபம் கொண்டிருக்கிறார்கள்.
புதன்கிழமை டிஏபி-இன் நிதிதிரட்டும் விருந்தில் லிம் பேசிய பேச்சுத்தான் அவர்களின் கோபத்துக்குக் காரணம். லிம் தம் உரையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிஎன் “முட்டைதான் சாப்பிட வேண்டும்” (ஒரு தொகுதியும் கிடைக்கக்கூடாது) என்று குறிப்பிட்டார்.
பிஎன்னுக்கு ஒரு தொகுதியும் அளிக்கக்கூடாது என்று லிம் கூறியது திமிரான பேச்சு என்று மாநில அம்னோ இளைஞர் தலைவர் ஷேய்க் உசேன் மைடின் சாடினார்.
இப்படிப்பட்ட ஆணவப் போக்கைக் கொண்டிருக்கும் பக்காத்தான் ரக்யாட்டுக்கு 2008 மார்சில் கிடைத்ததைவிட குறைவான இடங்களே கிடைக்கும் என்று ஷேய்க் உசேன்(வலம்) கூறினார்.
“லிம் ஒரு ‘கம்பத்து ஹீரோதான்’. இன உணர்வுகளைப் பயன்படுத்தி சீனச் சமூகத்தினரை ஏமாற்றி வைத்திருக்கிறார்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
இப்போதைக்கு பினாங்கு சட்டமன்றத்தில் பக்காத்தான் 29 இடங்களையும் அம்னோ 11 இடங்களையும் வைத்துள்ளன.பிஎன் பங்காளிக் கட்சிகளான மசீச, கெராக்கான், மஇகா ஆகியவை எந்த இடத்தையும் வெற்றிபெறவில்லை.
2008-க்கு முன்னர் பினாங்கு மக்களிடையே நிலவிய ஒற்றுமை உணர்வை லிம் உடைத்தெறிந்து விட்டார் என்று ஷேய்க் உசேன் குற்றம் சாட்டினார்.
லிம், “பிரித்தாளும்” கொள்கையைக் கடைப்பிடிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அக்கொள்கை கிராமப்புறங்களில் மட்டுமே வெற்றி பெறுகிறது என்றார்.அங்குதான் இனிப்பான செய்திகளைக் கூறி மக்களை மயக்க முடிகிறது.
டிஏபி விருந்தில் அக்கட்சியின் மூன்று இந்திய தலைவர்கள்-கர்பால், ஆர்எஸ்என்.ராயர்,ஏ.தனசேகரன்- கலந்துகொள்ளாதது இந்திய சமூகத்தை ஓரங்கட்டும் கட்சியின் கொள்கையால் அவர்கள் “அதிருப்தி” அடைந்திருப்பதைக் காண்பிக்கிறது என்றவர் வலியுறுத்தினார்.
“லிம் அவரது உரையில் மலாய்க்காரர் வாக்குகளில் 40விழுக்காடும் சீனர்களின் வாக்குகளில் 90விழுக்காடும்தான் தமக்குத் தேவை என்றார். இந்தியர்களை அவர் குறிப்பிடவில்லை. இது அவர்கள் தேவையில்லை என்று அவர் நினைப்பதைத்தான் காட்டுகிறது”, என்றாரவர்.
‘அளவற்ற அதிகாரத்தால் அளவில்லா கேடுதான்’
இன்னொரு பிஎன் தலைவர், கெராக்கானின் பல்ஜிட் சிங், லிம் அவ்வாறு பேசியது தப்பு என்றார்.
எல்லா இடங்களும் பக்காத்தானுக்குத்தான் என்று நினைப்பது அகங்காரத்தைக் காண்பிக்கிறது என்று கூறிய மாநில கெராக்கான் சட்ட, மனித உரிமைப் பிரிவுத் தலைவரான பல்ஜிட், “ அளவற்ற அதிகாரம் அளவில்லா கேடுகளை உண்டாக்கும்” என்றார்.
“இது சர்வாதிகாரத்தின் அடையாளமாகும்”, என்றாரவர்.
“லிம் ஆதரவாளர்களை உற்சாகப்படுத்த அவ்வாறு பேசியிருக்கலாம்.ஆனால், எல்லா அதிகாரத்தையும் கைப்பற்றி எதிர்ப்புக்குரலுக்கு இடம்தர மறுப்பது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல”, என்று பல்ஜிட் மலேசியாகினியிடம் கூறினார்.