“இசி விருப்பம்போல் பெயர்களை வெட்டுகிறது, ஒட்டுகிறது”

தேர்தல் ஆணையம் (இசி)வாக்காளர் பட்டியலிலிருந்து 120,000 பெயர்களை நீக்கி, 6,705 பெயர்களைப் புதிதாகச் சேர்த்துக்கொண்டிருக்கிறது. அவ்வாறு  செய்வதற்குமுன் அவற்றைக் காட்சிக்கு வைத்திருக்க வேண்டும், அரசு இதழில் வெளியிட்டிருக்க வேண்டும்.ஆனால் அந்த நடைமுறைகள்  பின்பற்றப்படவில்லை என்று பிகேஆர் கூறுகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில்  பல பெயர்களை இசி அகற்றியுள்ளது என குவாந்தான் எம்பி பவிசியா சாலே இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

“அவை இறந்துபோன வாக்காளர்களின் பெயர்கள்  என்று அது கூறிக்கொண்டது. அவர்கள் உண்மையில் இறந்தவர்கள்தான் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?”, என்று பவுசியா வினவினார்.

2010 டிசம்பரிலும் 2011 செப்டம்பரிலும் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை ஒப்பிட்டபோது இக்குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

“சாபாவில் வாக்களிக்கும் தகுதியற்ற 10,000வாக்காளர்களை அகற்றுமாறு நாங்கள் கேட்டுக்கொண்டபோது இசி மறுத்தது. ஆனால், இப்போது மற்ற இடங்களில் பெயர்களை நீக்கி வருகிறார்கள்.

“இது வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லு செய்யப்பார்க்கிறார்கள் என்பதைக் காண்பிக்கிறது”, என்று பவுசியா கூறினார்.

சட்டப்படி இசி வாக்காளர் பட்டியலை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். அதற்குமுன் காலாண்டு வரைவு ஒன்றைக் காட்சிக்கு வைக்க வேண்டும்.

அவ்வரைவில் புதிதாக வாக்காளர்களாக பதிவு செய்துகொண்டவர்களின் பெயர்கள், முகவரிகளை மாற்றிக்கொண்டவர் விவரம், இறந்த வாக்காளர்களின் பெயர்கள் முதலியவை இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் அவ்வரைவு ஒரு வாரத்துக்குப்  பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

அவ்வரைவு அரசு இதழில் வெளியிடப்பட்டு தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்காளர் பட்டியலாகுமுன்னர்,அது காட்சிக்கு வைக்கப்படும் காலத்தில் மறுப்பு தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் மறுப்பு தெரிவிக்கலாம்.இதுதான் வழக்கத்தில் உள்ள நடைமுறை. இதை மீறுவது முறையல்ல என்று பவிசியா குறிப்பிட்டார்.

இசியின் போக்கால், மாற்றரசுக்கட்சிகளின் வசமுள்ள  சில தொகுதிகளின் முடிவுகள் பாதிப்புறலாம்.

“சில இடங்களில் 1,000வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றோம்.அங்கு திடீரென்று 600 வாக்காளர்கள் அகற்றப்பட்டால் என்னவாகும்?”, என்றவர் வினவினார்.

இசி-இன் நடவடிக்கைகளைக் கண்காணிக்க சுயேச்சை அமைப்பு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று பவிசியா கேட்டுக்கொண்டார்.

TAGS: