பேராயர்: அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் சீர்திருத்தங்களை உறுதி செய்யுங்கள்

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் சீர்திருத்தங்கள் முன்மொழியப்பட்டு முழுமை பெறுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று பேராயர் மர்பி பாக்கியம் கேட்டுக் கொண்டுள்ளார்.

“சக மலேசியர்கள் என்னும் முறையில் நாங்கள் சிறந்த மலேசியாவைக் காணும் பொது நோக்கத்தை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம். தேர்தல் சீர்திருத்தத்திற்கான நடைமுறைகள் அனைத்துத் தரப்பினருடைய கருத்துக்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறும் நாங்கள் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.”

“அந்த சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தைக் கருதி அவை அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக  முன்மொழியப்பட்டு முழுமை பெறுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்,” என அந்த கத்தோலிக்க பேராயர் விடுத்த அறிக்கை கூறியது.

பாக்கியம் மலேசிய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் தலைவரும் ஆவார். அரசாங்கம் அந்த விவகாரம் மீது பல்வேறு சமூகப் பிரிவுகளின் யோசனைகளைச் செவிமடுக்கவும் பரிசீலிக்கவும் தயாராக இருப்பது “மகிழ்ச்சி” அளிப்பதாகவும் அவர் சொன்னார்.

“அத்தகைய சீர்திருத்தங்களுக்கான வேண்டுகோளின் நோக்கம், சுதந்திரமான தூய்மையான தேர்தல்களை உறுதி செய்வதாகும்”, என்றும் பாக்கியம் குறிப்பிட்டார்.

சிவில் சமூக அமைப்புக்கள் குறிப்பாக பெர்சே 2.0 அமைப்பு கொடுத்த அழுத்தத்தைத் தொடர்ந்து தேர்தல் சீர்திருத்தங்கள் மீது நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைக்கப் போவதாக கடந்த மாதம் பிரதமர் நஜிப் ரசாக் அறிவித்தார்.

ஆனால் அந்தக் குழு தனது பணியை முடிப்பதற்குக் காத்திருக்காமால் அடுத்த பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் நடத்தப்படலாம் என அவர் பின்னர் கூறினார். அது கடும் விமர்சனத்துக்கு இலக்கானது.

நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் பரிந்துரைகளை அமலாக்குவதற்கு முன்னர் பொதுத் தேர்தலை நஜிப் நடத்தினால் அந்தக் குழு அமைக்கப்படுவதால் எந்தப் பயனும் இல்லை என பெர்சே 2.0ம் கூறியுள்ளது.

கடந்த ஜுலை 9ம் தேதி அந்த அமைப்பு தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரி கோலாலம்பூரில் பேரணி ஒன்றை நடத்தியது. அதில் 50,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

.

TAGS: