இசி: சிலாங்கூர் மந்திரி புசாரின் வாக்களிப்பு பகுதி மாறவில்லை

சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் இப்போது லெம்பா பந்தாய் வாக்காளர். அவர் ஏற்கனவே அண்டையிலுள்ள நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் வாக்காளராக இருந்தாலும் தொகுதி எல்லை திருத்த நடவடிக்கையைத் தொடர்ந்து அவர் இப்போது லெம்பா பந்தாய் வாக்காளர் என இசி என்ற தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

நாட்டின் அதிகாரத்துவ நில வரை படத்துக்கு இணங்க தேர்தல் தொகுதி நில வரை படங்களை ஒருமுகப்படுத்துவது என இசி முடிவு செய்ததைத் தொடர்ந்து 2010ம் ஆண்டு தொடக்கத்தில் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதன் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் கூறினார்.

மந்திரி புசார் பெட்டாலிங் ஜெயா செக்சன் 16ல் உள்ள ஜாலான் 16/2ல் ஒரு வாக்காளராக பதிவு செய்து கொண்டுள்ளார் என அவர் சொன்னார்.

அந்த சாலை, திருத்த நடவடிக்கைக்கு முன்னதாக பெட்டாலிங் ஜெயா செலத்தான் தொகுதியின் ஒரு பகுதியாக தவறுதலாக சேர்க்கப்பட்டிருந்தது என்றார் அவர்.

பூகோள முறையைப் பயன்படுத்தி தேர்தல் நில வரை படங்களும் அதிகாரத்துவ நில வரை படங்களும் ஒருமுகப்படுத்தப்பட்ட போது அந்த  ஜாலான் 16/2 Rumah Kakitangan Universiti வாக்களிப்புப் பகுதிக்குள் வந்தது. அது லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதிக்குள் உள்ளது.

“அவர் மாற்றப்படவில்லை. அவர் இன்னும் அதே முகவரியில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளார். 1958ம் ஆண்டுக்கான தேர்தல் சட்டத்தின் கீழ் எல்லைகள் திருத்தப்பட்டுள்ளன,” என்று வான் அகமட் தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.

அண்மையில் நடைபெற்ற உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலின் போது, உலு சிலாங்கூரில் ஏற்கனவே வாக்களித்த 228 வாக்காளர்கள் சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்கள் என்பது கண்டு பிடிக்கப்பட்டதற்கும் எல்லை திருத்த நடவடிக்கையே காரணம் என்றும் வான் அகமட் தெரிவித்தார்.

TAGS: