பக்காத்தானை ஆதரித்து உங்கள் எதிர்காலத்தை இழக்க வேண்டாம்: நஜிப்

நாடு மற்றும் மக்களுடைய வளப்பத்தை தான் உறுதி செய்ய முடியும் என்பதை அரசாங்கம் இதுகாறும் நிரூபித்துள்ளதால் எதிர்க்கட்சிகள் தொடுக்கும் குற்றச்சாட்டுக்கள், கொடுக்கும் வாக்குறுதிகள் ஆகியவற்றுக்குச் செவி சாய்த்து எதிர்காலத்தை இழக்க வேண்டாம் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மக்களுக்கு நினைவுபடுத்தியுள்ளார்.

நாட்டை திறமையாக நிர்வாகம் செய்யும் ஆற்றலை பிஎன் பெற்றிருப்பதால் அது பல்வேறு உதவிகளை வழங்குவது உட்பட வளப்பத்தைக் கொண்டு வருவதற்கு அது பல திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

“எதிர்க்கட்சிகளின் கதைகளை நம்ப முடியாது. காரணம் அவற்றுக்கு இந்த நாட்டைத் திறமையாக நிர்வாகம் செய்வதற்கு ஆற்றல் இல்லை. இப்போது கூட அவை குழப்பத்தில் மூழ்கியுள்ளன. அவை வந்தால் அவற்றுக்குச் செவி சாய்க்காதீர்கள்.”

நஜிப் இன்று பேராக் புருவாஸில் சங்காட் புருவாஸ் தேசிய இடைநிலைப் பள்ளித் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “பிரதமருடன் காலைப் பொழுது” ( Sepagi Bersama Perdana Menteri ) என்ற நிகழ்வில் பேசினார்.

மக்களுக்கு பல வகையான உதவிகளை வழங்கினாலும் கூட அரசாங்கம் தேசியக் கடனைக் குறைப்பதிலும் தேசிய வருமானத்தை உயர்த்துவதிலும் வெற்றி கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“நாங்கள் இந்த நாட்டை நல்ல முரையில் நிர்வாகம் செய்ய முடியும். தேசியப் பொருளாதாரத்தைத் திறமையாக நிர்வாகம் செய்ய முடியும் என்பதே அதன் அர்த்தமாகும். தேசியப் பொருளாதாரம் தொடர்ந்து விரிவடைவதையும் தேசிய வருமானம் கூடுவதையும் நாங்கள் உறுதி செய்கிறோம். நாங்கள் வெற்றி அடையும் போது தேசிய செல்வத்தை நாங்கள் மக்களுக்குத் திரும்பக் கொடுக்கிறோம்,” என பேராக்கிற்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் சொன்னார்.

TAGS: