‘எம்ஏஎஸ் குறித்த நஜிப் முடிவுகள் அவருடைய சீர்திருத்தங்கள் மீது ஐயத்தை ஏற்படுத்துகின்றன’

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்,எம்ஏஎஸ்-ஸும் ஏர் ஏசியாவும் பங்குகளைப் பரிவர்த்தனை செய்து கொள்வதற்கு உணர்வுகளுக்கு அடிமையாகி உடனடியாக எடுத்த முடிவும் அது இப்போது நேர்மாற்றம் காணும் எனத் தோன்றுவதும் உருப்படியான சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு அவருக்கு உள்ள ஆற்றல் மீது நம்பிக்கையைத் தரவில்லை என டிஏபி கூறுகிறது.

கடந்த ஆண்டு இறுதி கால் பகுதியில் எம்ஏஎஸ் 1.28 பில்லியன் ரிங்கிட் இழப்பையும் அந்த நிதி ஆண்டு முழுமைக்கும் 2.52 பில்லியன் ரிங்கிட் இழப்பையும் பதிவு செய்த பின்னர் அந்த எம்ஏஎஸ்- ஏர் ஏசியா பங்குப் பரிவர்த்தனை “பயனற்றது என்பது மெய்பிக்கப்பட்டு விட்டது” என டிஏபி தேசிய பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா ஒர் அறிக்கையில் கூறியிருக்கிறார்

“அந்த இழப்பு மறுசீரமைப்பு, மீட்பு நடவடிக்கைகள் தோல்வி கண்டு விட்டதை காட்டுகிறது அத்துடன்  பரிவர்த்தனையைக் கைவிடுமாறு பிரதமருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்பதும் தெரிகிறது,” என்றார் அவர்.

அந்தப் பங்குப் பரிவர்த்தனையை மீட்டுக் கொள்வது குறித்து பிரதமர் இப்போது பரிசீலிப்பதாக வெளி வந்துள்ள தகவல்கள் அந்நிய முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஊட்டவில்லை என்றும் பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி-யுமான புவா சொன்னார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் செய்துள்ளப்பட்ட பங்குப் பரிவர்த்தனை உடன்பாட்டின் கீழ் எம்ஏஎஸ்-ஸில் பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கும் கஸானா நேசனல் பெர்ஹாட், ஏர் ஏசியாவில் 10 விழுக்காடு பங்குகளைப் பெறும். அதற்கு ஈடாக ஏர் ஏசியாவின் முதலீட்டு அமைப்பான டியூன் ஏர் சென் பெர்ஹாட்,  எம்ஏஎஸ்-ஸில் 20.5 விழுக்காடு பங்குகளைப் பெறும் என அறிவிக்கப்பட்டது.

உண்மையில் எம்ஏஎஸ்-ஸின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் அதன் முந்திய நிர்வாகத்தில் தொடங்கிய சீரழிவை முதலில் சமாளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட புவா, நான்காவது காலாண்டில் பதிவான 1.28  பில்லியன் ரிங்கிட் இழப்பில் 1.09 பில்லியன் ரிங்கிட்டுக்கு காலத்துக்கு ஒவ்வாத தளவாடக் கையிருப்பும் சரக்கு விமானங்களின் சேதாராமும் காரணம் என்பதை சுட்டிக் காட்டினார்.

“அந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட எட்டு மாதங்களுக்குப் பின்னர் அதனை மாற்றுவது பற்றி நஜிப் சிந்திப்பது, பிரிமியர் கிளப் ஆட்டங்களில் தங்கள் குழுக்கள் தோல்வி கண்ட பின்னர் குழு நிர்வாகிகளை மாற்றி புதியவர்களை அமர்த்தும் பிரிமியர் காற்பந்து மன்றங்களின் உரிமையாளர்கள் போக்கைப் போன்று உள்ளது. அதே விளையாட்டாளர்களையும் அதே அமைப்பையும் வைத்துக் கொண்டு புதிய நிர்வாகிகள் அதிசயத்தை நிகழ்த்த முடியும் என அவர்கள் எண்ணுகின்றனர்.”

பங்குகள் பரிவர்த்தனை ஒப்பந்தம் உடனடியாகச் செய்து கொள்ளப்பட்டதும் இப்போது அதனை மாற்றுவதற்கு சிந்திப்பதும் உணர்வுகளுக்கு ஏற்ப முடிவு எடுக்கும் நஜிப் போக்கைக் காட்டுகிறது என்றும் புவா சொன்னார்.

“உணர்வுகளுக்கு ஏற்ப முடிவுகள் நஜிப் நிர்வாகத்தில் அடிக்கடி எடுக்கப்பட்டுள்ளன. கொள்கைகளும் நேர்மாற்றம் கண்டுள்ளன. அவற்றில் பெரிதும் பேசப்பட்ட புதிய பொருளாதார வடிவத்தில் இன அளவுக் கட்டுப்பாடுகளை அகற்றும் நடவடிக்கை நடைமுறைக்கு வராததும்  மலேசியர்களுக்கு முதலிடம் என்பதற்கான விளக்கம் மாற்றப்பட்டதும் திறந்த டெண்டர்களுக்கான வாக்குறுதி கைவிடப்பட்டதும் அடங்கும்,” என புவா குறிப்பிட்டார்.

TAGS: