பிரதமர் இந்தியர்களிடம் சொல்கிறார்: “என்னுடன் நடந்து வாருங்கள்”

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தமது நிர்வாகம் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என்பதை மெய்பித்திருப்பதால் தம்முடன் இணைந்து நடந்து வருமாறு இந்திய சமூகத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அரசாங்கம் 2009ம் ஆண்டு தொடக்கம் தமிழ்ப் பள்ளிக்கூடங்களை மேம்படுத்துவதற்கு 440 மில்லியன் ரிங்கிட்டை செலவு செய்துள்ளதாக கூறிய அவர், அந்த சமூகம் தரமான கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதாக அளித்த வாக்குறுதியை தாம் நிறைவேற்றியுள்ளதாகச் சொன்னார்.

“அரசாங்கம் 2009ம் ஆண்டு அதனை உறுதி அளித்தது. இப்போது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நாங்கள் எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் என்பதைப் புள்ளி விவர ரீதியாக சொல்ல முடியும்.”

“நாடு முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 400 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் உண்மையான மேம்பாடு கண்டுள்ளதை நாம் காண்கிறோம்,” என நஜிப் பெட்டாலிங் ஜெயாவில் அரசு சாரா கல்வி அமைப்பான ஸ்ரீ முருகன் கல்வி மய்யத்தின் 30வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் கூறினார்.

அந்த வளர்ச்சி காரணமாக கடந்த ஆண்டு தமிழ்ப் பள்ளிகளில் அனைத்துப் பாடங்களிலும் ஏ தேர்ச்சி பெற்ற மாணவர் எண்ணிக்கை 47 விழுக்காடு கூடியுள்ளது என்றும் நஜிப் சொன்னார்.

“நான் என் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். அரசாங்கம் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது என்றால் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நாங்கள் இந்திய சமூகத்துக்கு என்ன செய்ய முடியும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.”

அந்தக் கொண்டாட்டங்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தமது நிர்வாகத்தின் அடைவு நிலை குறித்து மேலும் பேசிய நஜிப், இன்றைய நிகழ்வு நடைபெறும் இடமான விவேகானந்தா தேசிய வகை தமிழ்த் தொடக்கப் பள்ளிக்கூடமும் அந்த நிதிகளிலிருந்து நன்மை அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்- அந்தப் பள்ளிக்கூடத்தில் புதிய கட்டிடங்களைக் கட்டுவதற்கு அந்த நிதியிலிருந்து பெறப்பட்ட 3.3 மில்லியன் ரிங்கிட் பயன்படுத்தப்பட்டது.

‘என்னைத் தனியாக நடக்க விடாதீர்கள்’

அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற செலவு செய்துள்ளது. தொடர்ந்தும் அவ்வாறு செய்யும் எனக் கூறிய நஜிப் அது தேர்தல் தந்திரம் அல்ல என்றார்.

“நான் இந்த கடப்பாட்டை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் உங்கள் பிரதமர் என்ற முறையில் என்னால் அதனை தனியாகச் செய்ய முடியாது. அந்தப் பயணத்தில் நான் மட்டும் தனியாக நடந்து செல்ல முடியாது. அந்தப் பயணத்தை மேற்கொள்ளவும் நாம் நிர்ணயித்த இலக்கை அடையவும் நான் உங்கள் அனைவருடனும் நடந்து செல்ல வேண்டும்..,” என்றார் அவர்.

2012ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கட்டப்படும் நடப்பு ஆறு தமிழ்ப் பள்ளிகளுடன் கூடுதலாக இன்னொரு பள்ளியும்- தாமான் பிஜேஎஸ்1ல் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தேசிய வகைத் தமிழ்த் தொடக்கப்பள்ளியும் நிர்மாணிக்கப்படும் என நஜிப் அறிவித்தார்.

பொதுப் பல்கலைக்கழகங்களில் முதல் நிலை தேர்ச்சியைப் பெறும் தலையாய 100 இந்திய மாணவர்களுக்கு ( 100 first class honours Indian students )பொதுப் பல்கலைக்கழகங்களில் தங்கள் கல்வியைத் மேலும் தொடருவதற்கு முழு உபகாரச் சம்பளங்கள் வழங்கப்படும்.

இந்திய சமூகத்துக்கு அரசாங்கம் உண்மையுடன் முயற்சிகளை மேற்கொள்வதின் நேரடி விளைவாக அரசாங்கத்தின் மீது இந்திய சமூகத்தின் நம்பிக்கை கூடியுள்ளது என்றும் நஜிப் மேலும் சொன்னார்.

“நாங்கள் அந்தப் புதிய தொடக்கத்திலிருந்து வலிமை அடைவோம். அடுத்து வரும் சிறந்த எதிர்காலத்துக்குள் கூடுதல் பிணைப்புடனும் நம்பிக்கையுடனும் நாம் நுழைவோம்.”

2008ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பிஎன் -னுக்கு எதிராக இந்திய சமூகத்தினரில் பெரும்பாலோர்  வாக்களித்ததைத் தொடர்ந்து அந்த சமூகத்தின் ஆதரவை மீண்டும் பெறுவதற்கு அண்மைய ஆண்டுகளாக நஜிப் கடுமையாக பாடுபட்டு வருகிறார்.

அண்மைய காலமாக இந்து சமய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது தம் மீது நம்பிக்கை வைக்குமாறு அந்த சமூகத்தை நஜிப் கேட்டுக் கொண்டு வருகிறார்.

TAGS: