கர்பால்-ராமசாமி தகராறு இன்னும் ஓயவில்லை

டிஏபி துணைத் தலைமைச் செயலாளர் பி ராமசாமி கட்சிக் கட்டுகோப்பை மீறினார் என்ற குற்றச்சாட்டிலிருந்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விடுவித்ததை டிஏபி தலைவர் கர்பால் சிங் நிராகரித்துள்ளார்.

ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் ராமசாமியும் இடம் பெற்றுள்ளதால் அவரை விசாரிப்பதற்கு அந்தக் குழுவுக்குத் தகுதி இல்லை எனப் பினாங்கில் கர்பால் நிருபர்களிடம் கூறினார்.

அந்த ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள் ராஜினாமா செய்து விட்டு புதிய குழு அமைக்கப்படுவதற்கு வழி வகுத்து அந்தக் குழு அந்த விஷயத்தை விசாரிப்பதற்கு அனுமதித்திருக்க வேண்டும் என மூத்த வழக்குரைஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

“தொடக்கத்திலிருந்தே அழிவுக்கான விதை விதைக்கப்பட்டு விட்டது. அவர்கள் தங்களில் ஒருவர் மீது தீர்ப்பு வழங்க விசாரித்தனர்,” என்றார் அவர்.

ராமசாமியுடன், தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், தேசிய உதவித் தலைவர் தான் கோ வாய், பினாங்கு உதவித் தலைவர் லிம் ஹொக் செங் ஆகியோர் மற்ற உறுப்பினர்கள் ஆவர்.

ராமசாமியை விடுவிக்க அந்தக் குழு முடிவு செய்ததை ஆட்சேபித்து 33 பேர் சார்பில் ஆர்எஸ்என் ராயர், ஏ தனசேகரன் என்ற இரண்டு பினாங்கு டிஏபி தலைவர்ஜள் முறையீடு செய்துள்ள தகவலையும் கர்பால் வெளியிட்டார்.

விரைவில் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் அந்த விவகாரம் விவாதிக்கப்படும் என்று அவர் எதிர்பார்க்கிறார். அவசியமானல் முடிவு எடுப்பதற்காக அது தேசியக் கட்சிப் பேரவைக்கும் கொண்டு செல்லப்படலாம்.

“எந்த நீதிமன்றத்திலும் இது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அதனைச் செய்யக் கூடாது. செய்யவும் கூடாது ( தனது சொந்த உறுப்பினர் மீது தீர்ப்பளிக்க குழு விசாரிப்பதை),” என்றும் கர்பால் சொன்னார்.

ராயருக்கும் தனசேகரனுக்கும் எதிராக டிசம்பர் 11ம் தேதி, டிஏபி கட்சியின் பினாங்கு மாநில மாநாட்டின் போது கூட்டம் நடைபெற்ற பேர்ல் வியூ ஹோட்டலுக்கு வெளியில் ஆர்ப்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்ததாக ராமசாமி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்தச் சம்பவத்துடன் ராமசாமியை பிணைப்பதற்கு “நேரடி ஆதாரம் ஏதும் இல்லை” என்றும் அதனால் அவர் அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்றும் மார்ச் 12ம் தேதி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு தலைமை தாங்கும் தான் அறிவித்தார்.

கட்சியில் ‘ஞானத் தந்தைகள்’ யாரும் இருக்கக் கூடாது என ராமசாமி கூறியதைத் தொடர்ந்து கர்பாலுக்கும் அவருக்கும் இடையிலான தகராறு தலைப்புச் செய்திகளாக வெளியாகின.

தேர்தல் வேட்பாளர்களை டிஏப் தலைமைத்துவம் மட்டுமே நியமிக்க முடியும் என கர்பால் விடுத்த அறிக்கைக்கு ராமசாமி பதில் அளித்தார்.

TAGS: