தேசிய தலைவர் கர்பால் சிங்குக்கும் பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமிக்குமிடையில் நிகழும் சர்ச்சையில் இதுவரை மெளனம் காத்த டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இப்போது மெளனம் கலைந்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
கட்சி விவகாரங்களை உள்ளுக்குள்ளேயே விவாதித்துத் தீர்வுகாண வேண்டும் என்றவர் குறிப்பிட்டார்.
உள் பிரச்னைகளை வெளியில் கொண்டுசென்றால், டிஏபி-யின் எதிரிகள் அதை ஒரு வாய்ப்பாகக் கருதி நிலைமையை அவர்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முனைவார்கள் என்றாரவர்.
இதுவே டிஏபி உறுப்பினர்கள் அனைவரின் உணர்வுமாகும் என்று கூறிய குவான் எங், கட்சித் தலைவர்கள் அந்த அடிப்படைக் கொள்கையை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“உள்விவகாரங்களை உள்ளுக்குள்ளேயே வைத்துக்கொள்வோம்.அவற்றை வெளியில் கொண்டுசென்று உறுப்பினர்களின் வருத்தத்தை அதிகரிக்கவும் வேண்டாம். எதிரிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவும் வேண்டாம்”, என்றாரவர்.
இராமசாமிமீது தவறேதுமில்லை என்ற கட்சி ஒழுங்குவாரியம் செய்துள்ள முடிவுமீது அதிருப்தி அடைந்திருப்பதை கர்பால் நேற்று வெளிப்படையாகவே தெரிவித்தார்.
அக்குழுவின் முடிவு “செல்லத்தக்கதல்ல” என்று கர்பால் கூறினார். ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் ராமசாமியும் இடம் பெற்றுள்ளதால் அவரை அக்குழு விசாரணை செய்வது ஏற்புடையதல்ல என்றாரவர்.
லிம், தாமும் மற்ற தலைவர்களும் கர்பாலைச் சந்தித்து இவ்விவகாரத்துக்கு முடிவுகாணப் போவதாகக் கூறினார்.