DAP: ‘மாஜு துரித நெடுஞ்சாலை பிஎன் நடத்தும் வழக்கமான நெடுஞ்சாலைக் கொள்ளை’

சர்ச்சைக்குரிய மாஜு துரித நெடுஞ்சாலையின் (MEX) சலுகை உரிமை கொடுக்கப்பட்டுள்ள முறை,  மக்கள் வரிப்பணத்தைக் கொண்ட நிதிகளைத் தனது சேவகர்கள் உறிஞ்சுவதற்கு பிஎன் எப்படி அனுமதிக்கிறது என்பதற்கு “தெளிவான” எடுத்துக் காட்டு என டிஏபி பிஜே உத்தாரா எம்பி டோனி புவா கூறுகிறார்.

“அந்த நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கு மக்கள் வரிப் பணம் பயன்படுத்தப்பட்டு பின்னர் கட்டணம் வசூலிப்பதின் மூலம் அதுவும் இந்த விஷயத்தில் 33 ஆண்டுகளுக்கு வரி செலுத்தும் மக்களிடமிருந்து டோல் கட்டணமாக பிஎன் சேவகர் ஒருவர் வசூலிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள “தெளிவான” உதாரணம்.”

“நல்ல வெளிச்சமான பகல் நேரத்தில் பிஎன் அரசாங்கமும் அதன் சேவகர்களும் நடத்துகின்ற நெடுஞ்சாலை கொள்ளைகளுக்கு அதை விட நல்ல சான்று இருக்க முடியாது,” என அவர் விடுத்த அறிக்கை கூறியது.

அந்த மாஜு துரித நெடுஞ்சாலைக்கான சலுகை 1.7 பில்லியன் ரிங்கிட்டுக்கு EP Manufacturing Berhad (EPMB) என்னும் நிறுவனத்துக்கு விற்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த நெடுஞ்சாலையைக் கட்டுவதற்கு அரசாங்கம்  வழங்கிய 976.7 மில்லியன் ரிங்கிட்டை மாஜு ஹோல்டிங்ஸ் திருப்பிக் கொடுக்க வேண்டும் எனக் கோர வேண்டும் என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் நேற்று கூறியுள்ளது பற்றி புவா கருத்துரைத்தார்.

அந்த நெடுஞ்சாலையைக் கட்டுவதற்கு மாஜு, 60 மில்லியன் ரிங்கிட்டை மட்டுமே செலவு செய்துள்ளது என மதிப்பிட்ட ராபிஸி, மக்கள் செலவில் அந்த நிறுவனத்துக்கு “அதிர்ஷ்டம்” கிடைத்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

அத்துடன் அந்த நெடுஞ்சாலையை கட்டுவதற்கான செலவுகளில் பெரும்பகுதியை மக்களே தாங்கிக் கொண்டுள்ளனர் என்றார் அவர்.

அந்த நெடுஞ்சாலைக்கான கட்டுமானச் செலவுகளில் முக்கால் பகுதியை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ள வேளையில் அதனை ஏன் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கேள்வி  எழுவதாக புவா சொன்னார்.

“அரசாங்கம் ஏன் எஞ்சியுள்ள 343 மில்லியன் ரிங்கிட் என்ற சிறிய தொகையை வழங்கி நெடுஞ்சாலைக் கட்டுமானத்தை தனியார் மயமாக்காமல் சொந்தமாகவே முடித்திருக்காலமே ?  அத்துடன் அந்த சலுகை உடன்பாடும் எந்த திறந்த டெண்டரும் இல்லாமல் நேரடிப் பேச்சுக்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. ”

2007ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட மாஜு உடன்பாடு, 1998, 2003, 2006 ஆகிய ஆண்டுகளில் துணை ஒப்பந்தங்கள் கையெழுத்தானதின் மூலம் பல முறை திருத்தப்பட்டு விட்டதாக டிஏபி தேசியப் பிரசாரப் பிரிவுச் செயலாளருமான புவா சொன்னார்.

“2008ம் ஆண்டு நவம்பர் மாதம் மற்ற நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை அரசாங்கம் ரகசிய நிலையிலிருந்து விடுவித்த போது மாஜு துரித நெடுஞ்சாலை ஒப்பந்தம் சேர்க்கப்படவே இல்லை. அதனால் இன்று வரை அந்த ஒப்பந்த விவரங்கள் மர்மமாகவே இருக்கின்றன,” என்றும் புவா தெரிவித்தார்.

TAGS: