கெடா பாஸ் இளைஞர்கள்: பாஹ்ரோல்ராஸி போக வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்

கெடா பாஸ் தலைமைத்துவத்திலிருந்து துணை ஆணையர்களான பாஹ்ரோல்ராஸி ஸாவாவி-யும் இஸ்மாயில் சாலே-யும்  விலக வேண்டும் என கெடா பாஸ் இளைஞர் பிரிவு விரும்புகிறது.

மாநில பாஸ் இளைஞர் பிரிவின் மூத்த தலைவருமான அந்த  வட்டாரம் அதனைத் தெரிவித்தது. அந்த முடிவு இளைஞர் பிரிவின் சொந்த முடிவு என்றும் வெளியார் ‘தலையீடு’ ஏதும் இல்லை என்றும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத அந்த வட்டாரம் குறிப்பிட்டது.

தம்மையும் இஸ்மாயிலையும் வெளியேற்றுவதற்கு இளைஞர் பிரிவை மூன்றாம் தரப்பு ஒன்று தூண்டி விடுவதாக நேற்று பாஹ்ரோல்ராஸி கூறியிருந்தார்.

“இளைஞர் பிரிவு முட்டாள் அல்ல. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என எங்களுக்கு யாரும் சொல்வதில்லை. அவர்கள் என்ன செய்கின்றனர் என்பது எங்களுக்குத் தெரியாது என நீங்கள் நினைக்கின்றீர்களா ?”

“அந்த இரண்டு துணை ஆணையர்களும் நீக்கப்பட வேண்டும் என இளைஞர் பிரிவு தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறது.” அது தான் மாநில இளைஞர் பிரிவின் நிலை என்றார் அவர்.

“மற்றவர்களால் பயன்படுத்தப்படுவதற்கு நாங்கள் முட்டாள்களும் அல்ல. வெட்கம் கெட்டவர்களும் அல்ல,” அந்த என அந்த மூத்த மாநில பாஸ் இளைஞர் தலைவர் சொன்னார்.

“எங்களை ஒரு தரப்பு தூண்டி விடுவதாக திடீரென பேசப்படுகிறது. அந்தத் தரப்பு எங்களைத் தூண்டும் அளவுக்கு வலிமை வாய்ந்ததாக இருக்க வேண்டும்,” என அந்த வட்டாரம் மலேசியாகினியிடம் கூறியது.

கெடாவை சீர்படுத்துவது நோக்கமாகும்

கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக்குடன் தகராற்றில் ஈடுபட்டிருந்த அந்த இருவரையும் கைவிட வேண்டும் என்ற எண்ணம், இளைஞர் பிரிவின் முடிவு மட்டுமல்ல. அடி நிலை உறுப்பினர்களின் விருப்பமும் ஆகும் என்றும் அந்த வட்டாரம் கூறியது.

அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு கெடா தலைமைத்துவத்தை மறு சீரமைப்புச் செய்வது அதன் நோக்கம் என அது வலியுறுத்தியது. அந்த இருவரையும் குறி இலக்காகக் கொண்டதல்ல அது.

“நாங்கள் கெடா பாஸ் தலைமைத்துவத்தைத் திருத்தியமைக்க விரும்புகிறோம். தகுதியும் ஆற்றலும் கொண்டவர்கள் கட்சியை வழி நடத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அந்த இருவரும் நீக்கப்பட வேண்டும் என நாங்கள் கோரவில்லை.”

TAGS: