டயிம்:பொதுத் தேர்தலில் மூன்று மாநிலங்களை மட்டுமே பிஎன் முழுசாக நம்ப முடியும்

2008 பொதுத் தேர்தலில் பினாங்கு, சிலாங்கூர், கெடா ஆகியவற்றில் பிஎன் ஆட்சி கவிழும் என்பதை முன்னறிந்து கூறியிருந்த முன்னாள் நிதி அமைச்சர் டயிம் சைனுடின் இப்போது 13வது பொதுத் தேர்தல் பற்றியும் ஒரு கணிப்பைச் செய்துள்ளார்.

அவரது கணிப்பு மத்திய அரசுக்கு அவ்வளவாக அனுசரணையாக இல்லை. சீனமொழி நாளேடான நன்யாங் சியாங் பாவுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் டயிம் பொதுத் தேர்தல் பற்றிய கணிப்பைச் செய்துள்ளார்.

ஜோகூர், மலாக்கா, பகாங் ஆகியவற்றில்  பிஎன் எளிதாக வெற்றி பெறும் என்றவர் எதிர்பார்க்கிறார்.

கெடாவிலும் சிலாங்கூரிலும் பக்காத்தான் ரக்யாட்டிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமானால் பொருத்தமான தலைமைத்துவ அணியை உருவாக்குவது முக்கியம்.

அம்னோ வலுவான முறையில் ஒன்றுபட்டிருந்தால் மட்டுமே சபாவையும் திரெங்கானுவையும் தக்க வைத்துக்கொள்ள முடியும்.ஆனால், பேராக்கைத் தக்க வைத்துக்கொள்வது எளிதாக இருக்காது.

நெகிரி செம்பிலான், பக்காத்தான் வலுவாகக் காலூன்றியுள்ள ஒரு மாநிலம்.அங்கு பிஎன் ஆறு இடங்கள் பெரும்பான்மையில் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.அங்கு சில முக்கிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.

அவற்றை அவர் விவரிக்கவில்லை.ஆனால், அங்கு மந்திரி புசார் பதவிக்குப் பொருத்தமான வேட்பாளர் தேவை.நடப்பு மந்திரி புசார், முகம்மட் ஹசன் மத்திய அரசுக்கு நகர்த்தப்படுவார் என்று தெரிகிறது.

பினாங்கும் கிளந்தானும் பக்காத்தான் கோட்டைகள். அவற்றைக் கைப்பற்றும் பிஎன் முயற்சி தோல்வியில்தான் முடியும் என்று டயிம் நினைக்கிறார்.

பிரதமர் நஜிப்பும் அவரின் குழுவினரும் “படைவீரர்கள் இல்லாத் தளபதிகள்” என்று டயிம் வருணித்தார்.

“பிரதமரும் மற்ற முக்கிய தலைவர்களும் நிறைய செய்துள்ளனர். ஆனால்,அவர்களின் இப்போதைய நிலை ‘படைவீரர்கள் இல்லாத் தளபதிகள்’ நிலைக்கு ஒப்பாகும்.பிஎன் படைவீர்ர்கள் எங்கே? தொகுதிகளிலும் கிளைகளிலும் உள்ள தலைவர்கள் மக்களைச் சந்திக்க மேலும் முனைப்புக் காட்ட வேண்டும்.”

நஜிப்பைச் சுற்றி இருப்பவர்கள் அவரை ஒத்த சிந்தனையுள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.

“நாடாளுமன்றத் தேர்தல்களின் வெற்றிக்குப் பிரதமரை மட்டுமே நம்பியிருக்க முடியாது. பிஎன்னுக்கு ஒரு வலுவான அணி தேவை. பிரதமரின் பங்கு அளப்பரியது. ஆனால், அவரது அணியைச் சேர்ந்தவர்களை மக்களால் காண முடிவதில்லை. அவர்தான் அவர்களை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டியுள்ளது.  இதுதான் பிரச்னை.”

பயன்படாதவர்களை ஒதுக்கித் தள்ள வேண்டும் என்று அந்த மூத்த அம்னோ தலைவர் நஜிப்புக்கு ஆலோசனை கூறினார்.

டயிம், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு நெருக்கமானவர். 1984-இலிருந்து 2001வரை அம்னோவின் பொருளாளராக இருந்தார்.

1984-இலிருந்து 1991வரை நிதி அமைச்சராகவும் 1998-இல் பிரதமர்துறையில் சிறப்புப் பணி அமைச்சராகவும் இருந்தார்.1999-இல், மீண்டும் நிதி அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு 2001-இல்  பணிஓய்வு பெற்றார்.

12வது பொதுத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னர், பிஎன் பினாங்கு, கெடா, சிலாங்கூர் ஆகியவற்றை இழந்துவிடும் என்று டயிம் எச்சரித்திருந்தார்.

அவரது ‘தீர்க்க தரிசனம்’ பலித்தது. 2008 மார்ச் 8-இல் அரசியல் சுனாமியால் தாக்குண்ட பிஎன் ஐந்து மாநிலங்களை மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுபங்கு பெரும்பான்மையையும் இழந்தது.

‘பிரதமர் நிதி அமைச்சராகவும் இருத்தல் கூடாது’

மலாய்க்காரர்-அல்லாத ஒருவரை நிதி அமைச்சராக நியமனம் செய்யலாம் என்றும் டயிம் கருத்துத் தெரிவித்தார்.அவர் நிதியியல்  மற்றும் பொருளாதார அறிவுள்ளவராகவும் உள்நாட்டு அரசியலை நன்கு அறிந்தவராகவும் இருப்பது அவசியம் என்றாரவர்.

பிரதமரே நிதி அமைச்சராக இருக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியவர் மகாதிர் என்றும் அது சரியான ஒன்றல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். பிரதமரே அம்னோ, பிஎன் தலைவராகவும் இருக்கிறார்.அவற்றுடன் நிதி அமைச்சர் பொறுப்பும் சேரும்போது- பணிச்சுமை தாங்க முடியாத அளவுக்குப் பெருகி விடுகிறது.

நஜிப் பிரிட்டனைப் பின்பற்ற வேண்டும் என்று டயிம் வலியுறுத்தினார்.

“பிரிட்டிஷ் பிரதமர்கள் நிதி அமைச்சராக இருப்பதில்லை…எதற்காக இரண்டாவது நிதி அமைச்சர் ஒருவர்? ஒரு முழு நிதி அமைச்சர் போதுமே”, என்றாரவர்.

TAGS: