“கணக்காளராகும் முயற்சியில் தோற்றுப்போனவன் நான்”, குவான் எங்

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், ஆஸ்திரேலியாவில் பொருளாதாரத்திலும் கணக்கியலிலும் பட்டம் பெற்றவர். ஆனாலும் ஒரு கணக்காளராகும் முயற்சியில் அவருக்குக் கிடைத்தது தோல்விதான்.

பட்டம் பெற்றதும் தம்முடன் படித்தவர்களுக்கு எல்லாம் வேலை கிடைத்துவிட்டது. ஆனால், தமக்கு மட்டும் வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்ததென லிம் (வலம்) குறிப்பிட்டார்.

பல மாதங்கள் முயன்ற பின்னர் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது.பெரிதும் மகிழ்ந்து போனார் லிம்.

“ஆனால், அந்த மகிழ்ச்சி ஒரு வாரம்கூட நீடிக்கவில்லை. என் தந்தை யாரென்று தெரிந்ததும் சீட்டைக் கிழித்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.” பினாங்கில்,150 கணக்காளர்கள் கலந்துகொண்ட ஏசிசிஏ கூட்டமொன்றில் பேசியபோது லிம் இவ்வாறு கூறினார்.

“உங்களில் சிலருக்கு என்னைப் பற்றித் தெரிந்திருக்காது. நான் டிஏபி தலைவர் லிம் கிட் சியாங்கின் மகன்.”

“என் தந்தையின் நேர்மை,வெளிப்படைத்தன்மை,நியாயம் பேசுதல், உண்மை எடுத்துரைத்தல் முதலிய பண்புகளை நானும் கொண்டிருப்பதால் கணக்காளனாகும் தகுதி எனக்கில்லை என்று கருதப்பட்டதுபோலும்.”

1980-கள், பேங்க் பூமிபுத்ரா இழப்புகள் போன்ற ஊழல்களை மூடிமறைக்க தில்லுமுல்லுகள் நிறைய நடைபெற்ற காலம் என்பதால் தம்முடைய பண்புகள் அப்பெரிய நிறுவனத்தில் கணக்காளனாவதற்குத் தடையாக இருந்தன என்றார்.

“அதனால் வேறு வழியில்லாமல் அரசியலில் ஈடுபட்டேன். முதலமைச்சர் ஆனேன்”, என்று லிம் நகைச்சுவையாகக் குறிப்பிட கூட்டத்தில் சிரிப்பலை பரவியது.

“அதனால் நினைத்ததை அடைய முடியவில்லையா,  வருத்தம் வேண்டாம்.

“நீங்களும் என்னப்போல் பினாங்கின் முதலமைச்சர் ஆகலாம்”, என்று பாகான் எம்பியுமான லிம் கூறினார்.

TAGS: