பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீசின் மகன்,செவ்வாய்க்கிழமை இரவு, மவுண்ட் கியாராவில் உள்ள ஒரு ஆடம்பர கொண்டோமினியத்தின் பாதுகாப்புக் கண்காணிப்பாளரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அச்சம்பவம் தொடர்பில் இரண்டு போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருப்பதை பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் வான் அப்துல் பாரி வான் அப்துல் காலிட் உறுதிப்படுத்தினார்.
“தெருச்சண்டை என்று குற்றவியல் சட்டத்தின் பகுதி 160-இன்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது”, என்று கூறிய அவர் மேல்விவரம் தெரிவிக்க மறுத்தார்.
கொண்டோமினிய நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு பேசியதில் பாதுகாவலர்களுக்கும் வருகையாளர் ஒருவருக்குமிடையில் சிறிய வாய்ச்சண்டை நிகழ்ந்ததை அதன் பேச்சாளர் ஒப்புக்கொண்டார்.ஆனால், அது பற்றி மேல்விவரங்கள் தேவையென்றால் போலீசிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.
சம்பவம் பற்றி அறிந்த வட்டாரம் ஒன்று, அது சிசிடிவி கேமிராக்களில் பதிவாகியிருப்பதாகக் கூறியது.
மூடிமறைக்க நெருக்குதல்
இப்போது அச்சம்பவத்தை மூடிமறைக்குமாறு கொண்டோமினிய நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக அவ்வட்டாரம் கூறிற்று.பாதுகாப்புச் சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் உரிமங்களைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் இருப்பதால் இவ்விவகாரம் மூடிமறைக்கப்படும் சாத்தியம் உள்ளது.
அமைச்சரின் மைந்தர் முகம்மட் நெடிம் முகம்மட் நஸ்ரி அசிஸ், போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றில் கொண்டோமினியத்திற்கு வந்தார்.அவருக்குப் பின்னே அவரின் மெய்ப்பாதுகாவலர் ஆடம்பர எம்பிவி வாகனமொன்றை ஓட்டி வந்தார்.
மெய்ப்பாதுகாப்பாளர் இறங்கி இரண்டு வாகனங்களில் உள்ளவர்கள் பற்றிய விவரங்களைப் பதிவு செய்ய முயன்றார்.ஆனால், அங்கிருந்த பாதுகாவலர்கள் இரண்டு வாகன ஓட்டுனர்களும் தங்களைப் பற்றிய விவரங்களைத் தனித்தனியே பதிவு செய்ய வேண்டும் என்று கூறினர்.
இதனால் அங்கு வாக்குவாதம் மூண்டது.அதைத் தீர்த்து வைக்க கண்காணிப்பாளர் அழைக்கப்பட்டார்.
“மெய்க்காப்பாளர், போர்ஷே காரில் இருப்பவர் ஒரு ‘தெங்கு(அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்)’என்றார்.ஆனால், நிர்வாகத்தின் விதிகளின்படி ஒவ்வொரு வாகனமோட்டியின் விவரங்களையும் தாங்கள் பதிவு செய்ய வேண்டும் என்று கண்காணிப்பாளர் விளக்கினார்”, என்று அவ்வட்டாரம் தெரிவித்தது.
இப்படி வாக்குவாதம் நடந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த நெடிம், தம் காரைவிட்டு இறங்கி வந்து கண்காணிப்பாளரின் கழுத்தைப் பிடித்து நெரித்து அவரின் தலையில் ஓங்கிக் குத்தினார்.
“கண்காணிப்பாளரை மெய்க்காப்பாளர் பிடித்துக் கொண்டிருந்ததால் அவரால் எதிர்த்துச் சண்டையிட முடியவில்லை”, என்று அவ்வட்டாரம் கூறிற்று.
காயமடைந்த 50-வயதைத் தாண்டிய அக்கண்காணிப்பாளர் மருத்துவமனையில் காயங்களுக்குச் சிகிச்சை செய்துகொண்ட பின்னர் அதே இரவில் ஜாலான் ட்ரேவர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனிடையே, அதே போலீஸ் நிலையத்தில் நெடிமின் மெய்க்காப்பாளர் தம் எஜமானரின் சார்பில் புகார் ஒன்றைச் செய்திருப்பதாகவும் தெரிகிறது.நஸ்ரியின் முகவரி அட்டை ஒன்றையும் அவர் கொடுத்ததாகத் தெரிகிறது.
தம்மை நெடிமின் ஊழியர் என்று போலீசிடம் அறிமுகப்படுத்திக்கொண்ட அம்மெய்க்காப்பாளர்,கண்காணிப்பாளர் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட நேர்ந்ததாகக் கூறினார்.
கண்காணிப்பாளர்தான் முதலில் தம்மைக் குத்தியதாகவும் பின்னர் சண்டையிட வருமாறு சவால் விட்டார் என்றும் அவர் கூறினார்.
அப்போது நிகழ்ந்த கைகலப்பில் கண்காணிப்பாளரின் வயிற்றில் உதைத்து அவரைக் கீழே தள்ளியதாகவும் பின்னர் அவர் எழுந்து தம் முகத்தில் குத்தியதாகவும் அவர் போலீசிடம் தெரிவித்தார்.