போலீஸ்: முக நூல், டிவிட்டர் ஆகியவை தேசியப் பாதுகாப்புக்கு மருட்டல்

முக நூல், டிவிட்டர் போன்ற சமூக இணையத் தளங்கள் மலேசியர்களுடைய சிந்தனைகளை மேலும் தாராள மயமாக்கியுள்ளதை போலீஸ் ஒப்புக் கொண்டுள்ளது.

அதனால் அவர்கள் தேசியப் பாதுகாப்புக்கு மருட்டலைத் தரக் கூடிய நடவடிக்கைகளில் இறங்குவதற்குக் கூட தயாராக இருப்பதாக  உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது ஒழுங்குப் பிரிவின் இயக்குநர் சாலே மாட் ரஷிட் கூறுகிறார்.

உத்துசான் மலேசியாவில் இன்று வெளியான பேட்டியில் அவரது கருத்துக்கள் காணப்படுகின்றன.

இணையம் தேசியப் பாதுகாப்புக்கு புதிய சவால்களைக் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

தாராள சிந்தனைகளைக் கொண்டவர்கள், மற்ற நாடுகளில் என்ன நிகழ்கின்றவற்றைக் கவனித்து   அவற்றை மலேசியாவுக்குள் கொண்டு வருவதே அந்த சவால்களுக்கான காரணம் ஆகும்.

மேற்காசியாவில் நிகழ்ந்த கலவரங்களையும் பேரணிகளையும் அதற்கு எடுத்துக்காட்டுக்களாகக் கூறலாம்.

“எல்லயில்லாத உலகில் மனிதர்களுடைய சிந்தனைகள் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அடைகிறது. குறிப்பாக அவர்கள் தாராள மய எண்ணங்களைப் பெறுகின்றனர். செய்யக் கூடாத காரியங்களைக் கூட இப்போது செய்யலாம் என்றும் அதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் அவர்கள் கருதுகின்றனர்.”

“இது குறித்துத் தான் நாங்கள் அஞ்சுகிறோம். மலேசியர்களுடைய சிந்தனைகள் எதிர்மறையான விஷயங்களின் செல்வாக்கிற்கு இரையாகும் போது அவை பொது ஒழுங்கிற்கும் பாதுகாப்புக்கும் மருட்டலை ஏற்படுத்துகின்றன. அதனால் நாட்டுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகக் கூடும்,” என சாலே சொன்னதாக அந்த ஏடு தெரிவிக்கின்றது.

கூட்டரசு அரசமைப்பில் பேச்சுச் சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்தரம் போன்றவை உட்பட பல மனித உரிமைகள் பொறிக்கப்பட்டிருந்தாலும் சம்பந்தப்பட்ட சட்டங்கள், விதிமுறைகள் ஆகியவற்றைப் பொறுத்து அந்த உரிமைகள் அறுதியானவை அல்ல. அவற்றுக்கும் வரம்பு உண்டு என்றும் சாலே வலியுறுத்தினார்.