சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலி, பதவியில் இருந்த போது நூறாயிரக்கணக்கான ரிங்கிட்டை விரயம் செய்தார் என பிகேஆர் புக்கிட் அந்தாரா பாங்சா பேராளர் அஸ்மின் அலி இன்று கூறியிருக்கிறார்.
அவர் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் அரச உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார்.
இஸ்லாமிய விவகாரங்கள், மலாய் பழக்க வழக்கங்கள், அடிப்படை வசதிகள், பொது வசதிகள் ஆகியவற்றுக்குப் பொறுப்பான ஆட்சிமன்ற உறுப்பினராக இருந்த போது ஹசான் தமது அலுவலகத்தை திருத்தி அமைத்துக் கொள்வதற்கு 300,000 ரிங்கிட்டை செலவு செய்ததாக அஸ்மின் சொன்னார்.
ஹசான் அண்மையில் பாஸ் கட்சியிலிருந்தும் ஆட்சி மன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார்.
“சிலாங்கூர் மலாய் பழக்க வழக்கங்கள், பாரம்பரியக் கழகம் (Padat) ஏற்பாடு செய்த மாநாடு ஒன்றுக்காக அவர் 550,000 ரிங்கிட்டையும் செலவு செய்தார். அந்தப் பணம் மக்களுக்கு நல்ல வழியில் செலவு செய்யப்பட்டிருக்க முடியும்,” என்றார் அஸ்மின்.
ஹசான் அப்போது அந்த மாநில அரசாங்க அமைப்பின் தலைவராகவும் இருந்தார்.
சாலை பராமரிப்பு துணைக் குத்தகைகளை வழங்குவதற்கு மாநில அரசாங்கம் பின்பற்றிய திறந்த டெண்டர் கொள்கையையும் ஹசான் புறக்கணித்தார் என்றும் பிகேஆர் துணைத் தலைவருமான அஸ்மின் குறிப்பிட்டார்.