இந்தியர் விவகாரங்கள்: பிஎன், பக்காத்தான் தலைவர்கள் அலசி ஆராய்வர்

வார இறுதியில், ஷா ஆலமில், பிஎன், பக்காத்தான் தலைவர்கள் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டு இந்தியர்கள் சம்பந்தப்பட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேசுவர்.

அரசியலின் இரு தரப்புகளையும் சேர்ந்த பெரும்புள்ளிகளும் இந்திய அரசுசாரா அமைப்புகளும் (NGO) கலந்துகொள்ளும் அந்த அரங்கம், “வாக்குகளைப் பெறுவதற்காக இந்தியர் மனம்கவரும் போர்க்களமாக விளங்கும்” என்று அதன் ஏற்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.

ஆளும் கூட்டணியிலிருந்து  மஇகா தலைவர் ஜி.பழனிவேல், பிபிபி தலைவர் எம்.கேவியெஸ், கெராக்கான் செனட்டர் ஏ.கோகிலன் பிள்ளை முதலானோர் அதில் கலந்துகொள்வர்.

மாற்றணியிலிருந்து டிஏபியின் பி.இராமசாமி, பிகேஆரின் சேவியர் ஜெயக்குமார், பிஎஸ்எம்மின் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் போன்றோர் இந்திய மலேசியர் நிலையினை எடுத்துரைப்பர்.

இருதரப்பினரும், இந்தியர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற,  2008 ‘அரசியல் சுனாமி’க்குப் பின்னர் எந்தளவு பாடுபட்டிருக்கிறார்கள் என்பதைத் தனித்தனியே எடுத்துரைப்பர்.

அவர்கள் ஒவ்வொருவரும் பேசுவதற்கு 10 நிமிடம் ஒதுக்கப்படும். அவர்களின் பேச்சுக்குப் பின்னர் பொதுமக்கள் கருத்துரைக்க மூன்று நிமிடம் கொடுக்கப்படும்.

“முடிந்தவரை பொதுமக்களில் பலருக்கும் கருத்துரைக்க வாய்ப்பு கொடுப்போம்”, என்று கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ள மலேசிய இந்தியர் வணிகச் சங்கம் (மீபா) கூறியது.

12வது பொதுத்தேர்தல், நாட்டின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது. அதில் ஐந்து மாநிலங்களை மாற்றரசுக் கட்சி கைப்பற்றியது. நாடாளுமன்றத்தில் பிஎன்னுக்கு இருந்த மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையும் பறிபோனது.

இதற்கு இண்ட்ராப் தொடக்கிவைத்த மாபெரும் மக்கள் சக்தி இயக்கமும் அதன் விளைவாக இந்தியர் வாக்குகள் பக்காத்தானுக்கு ஆதரவாக திரும்பியதும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் காக்கப்பட்டனவா?

இந்தக் கருத்தரங்கில், பக்காத்தான் அதன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதா?, பிஎன் சொல்லியபடி இந்தியர்களின் மனக்குறைகளைப் போக்க நடவடிக்கை மேற்கொண்டதா? என்பது முக்கியமாக ஆராயப்படும்.

“என்ன வாக்குறுதி கொடுத்தார்கள். கொடுத்த வாக்குறுதியில் எந்த அளவுக்கு நிறைவேற்றினார்கள் என்பதைக் கணக்கெடுக்கும் ஓர் அரங்கமாக அது அமையும்”, என்று மீபா அறிக்கை ஒன்று கூறிற்று.

இந்தியர் சமூகம் தொழில்துறை ஆகியவற்றில் பிரபலமாக விளங்குவோர், குறிப்பாக செம்பருத்தி ஆசிரியரும் வழக்குரைஞருமான கா. ஆறுமுகம், முன்னாள் தொழிற்சங்கவாதியான என்.சிவசுப்ரமணியம், வணிகரான பிரதிப் குமார், முன்னாள் ஐஎஸ்ஏ தடுப்புக்கைதி வி.கணபதி ராவ்,  போன்றோரும் அதில் பங்கு பெறுவார்கள் எனத் தெரிகிறது.

கருத்தரங்கம் செப்டம்பர் 11-இல், ஷா ஆலம், பிகேஎன்எஸ் டவரில் நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ள விரும்புவோர் ரிம100 செலுத்தித் தங்களைப் பதிந்து கொள்ள வேண்டும்.