செராஸ்-காஜாங் கிராண்ட் சாகா நெடுஞ்சாலையில் டோல் கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் எனக் கோரும் மகஜருக்கு கையெழுத்துக்களை திரட்டும் இயக்கத்தை டிஏபி தலைமையில் குடிமக்கள் நடவடிக்கைக் குழு இன்று மேற்கொண்டது.
செராஸுக்கு அருகில் உள்ள 9வது மைலில் அமைந்துள்ள டோல் கட்டண சாவடியில் அந்தக் குழு கையெழுத்துக்களை திரட்டும் இயக்கத்தை நடத்தியது.
“செராஸ் வாழ் மக்கள் படும் துயரங்கள். எங்களுக்கு டோல் வேண்டாம்” எனக் கூறும் வாசகங்களைக் கொண்ட பதாதைகளுடன் மஞ்சள் நிற சட்டைகளை அணிந்திருந்த கிட்டத்தட்ட 50 பேர் இன்று காலை தொடக்கம் அந்தச் சாவடியின் கோலாலம்பூருக்கு செல்லும் பகுதியில் காணப்பட்டனர்.
வழக்கமாக போக்குவரத்து நெரிசலாக இருக்கும் அந்தப் பகுதியில் நிற்கும் காரோட்டிகளிடமிருந்து கையெழுத்துக்களைப் பெற அவர்கள் எண்ணியிருந்தனர். ஏறத்தாழ 50 போலீஸ்காரர்களும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
அனுமதி இல்லாததால் அந்த இடத்தில் அவர்கள் கூடுவதற்கு அனுமதிக்கப் போலீசார் மறுத்து விட்டனர். அத்துடன் இன்று காலை எதிர்பாராத வகையில் போக்குவரத்தும் சுமூகமாக இருந்ததால் கையெழுத்துக்களை திரட்டும் அவர்கள் திட்டமும் மந்தமடைந்தது.
அவர்களுக்குப் போலீசார் முழு ஒத்துழைப்புத் தராவிட்டாலும் பேச்சுக்களின் போது அந்தக் குழுவுக்கு இணக்கமாக நடந்து கொண்டனர்.
“சரியான சிந்தனையுடன்” பிரச்னையை அணுக டோல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் தயாராக இருந்தால் தாங்களும் “நியாயமாக” நடந்து கொள்ளத் தயாராக இருப்பதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
கருத்துக்களை கேட்பதற்கு அணுகிய போது அந்த அதிகாரி எதுவும் சொல்ல மறுத்து விட்டார்.
“நீங்கள் மலேசியாகினியா? அப்படி என்றால் நீங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து அதனைப் பெற்றுக் கொள்ளுங்கள்,” எனப் பேச்சுக்கள் பற்ரி வினவியபோது அந்த அதிகாரி சொன்னார்.
போலீசாருக்கும் அந்தக் குழுவின் பேராளர் லீ கீ ஹியோங்கிற்கும் இடையில் விவாதம் நடந்த பின்னர் அந்த குழுவினர் ஒன்று கூடவும் 10 நிமிடங்களுக்கு நிருபர்களைச் சந்திக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.
நிருபர்கள் சந்திப்பு
நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு டோல் சாவடிகளில் ஒன்றை மூடுவது பற்றி அரசாங்கம் பரிசீலிப்பதாக பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்திருந்ததாக காஜாங் நகராட்சி மன்ற உறுப்பினரான எடி இங் கூறினார்.
அந்த நெடுஞ்சாலையைக் கட்டுவதற்கு ஏற்பட்ட செலவுகளை மீட்டுள்ளதை கிராண்ட் சாகா வாரிய அறிக்கை காட்டுவதாகவும் அவர் சொன்னார்.
“அந்த டோல் கட்டணம் அந்த நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் 200,000 வாகனங்களுக்கு சுமையாக மாறியுள்ளதோடு அந்த டோல் கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக சுற்றியுள்ள வீடமைப்புப் பகுதிகளின் சாலைகளை பயன்படுத்தும் காரோட்டிகள் அவற்றை முக்கிய சாலைகளாக மாற்றி விட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிருபர்கள் சந்திப்பு முடிந்த பின்னர் அந்த டோல் கட்டண சாவடிக்கு அடுத்து உள்ள சாலை வழியாக செல்லும் கார்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் அணுகுவதற்குப் போலீசார் அனுமதித்தனர். அவர்களுடன் சென்ற போலீசார், போக்குவரத்தைக் கட்டுப்படுத்தினர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் 20 நிமிடங்களுக்கு காரோட்டிகளை அணுகி கையெழுத்துக்களைத் திரட்டிய பின்னர் கலைந்து சென்றனர். போலீசார் அப்போது அவர்களை கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
2007ம் ஆண்டு ஜனவரி மாதம் அதே டோல் கட்டணத்துக்கு எதிராக இரண்டு வாரங்களுக்கு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கு போலீசார் மேற்கொண்ட கடும் நடவடிக்கையுடன் ஒப்பிடுகையில் இன்றைய நிலைமை பெரிதும் மாறுபட்டிருந்தது. அப்போது 21 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
அந்தக் குழு இணையத்தின் வழி ஆதரவு திரட்டும் நடவடிக்கையையும் தொடங்கியுள்ளது. www.petitiononline.com என்பது அதன் அகப்பக்கமாகும்.
அண்மைய காலமாக டோல் கட்டண வசூலிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்துள்ளன. பெரும்பாலான டோல் கட்டண நிறுவனங்கள் அரசியவாதிகளுடனும் அரசாங்கப் பிரமுகர்களுடனும் தொடர்புடையவை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர். அந்த நிறுவனங்கள் தங்களது செலவுகளை மீட்டு விட்டன. இப்போது மக்களைச் சிரமப்படுத்தி அவை ஆதாயம் தேடுவதாகவும் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.