சுதந்திரமான, நியாயமான தேர்தல்களுக்கான மூன்றாவது பேரணியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை பெர்சே 2.0 அமைப்பு தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் மறுத்துள்ளார்.
தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி), தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றிய தனது பணிகளை நிறைவு செய்த பின்னரே மூன்றாவது பேரணி குறித்து முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
“அப்படி ஏதும் நடத்தப்படும் என்றால் நான் பிஎஸ்சி அறிக்கைக்குப் பின்னர் அறிவிப்பேன்,” என அம்பிகா சொன்னார்.
தேர்தல் சீர்திருத்தங்களுக்குப் போராடும் அந்த அமைப்பின் பரிந்துரைகளை தனது பூர்வாங்க அறிக்கையில் இணைத்துக் கொள்ள பிஎஸ்சி தவறியதைத் தொடர்ந்து ஏப்ரல் 28ம் தேதி மூன்றாவது பேரணிக்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக வதந்திகள் உலாவுகின்றன.
இதனிடையே அந்த வதந்திகளை முக நூல் பக்கத்தில் பெர்சே 2.0 நடவடிக்கைக் குழு உறுப்பினர் ஒருவரும் மறுத்துள்ளார்.
“பெர்சே 3.0க்கான தேதி ஏப்ரல் 28, 2012 எனக் கூறப்படுவது உண்மையல்ல. பிஎஸ்சி அறிக்கையையும் அது குறித்த அரசாங்க நடவடிக்கையையும் பார்த்த பின்னர் பெர்சே 3.0 பற்றி நாங்கள் முடிவு செய்வோம்.”
“நாம் சாலைகளுக்குச் செல்ல வேண்டும் என நஜிப் விரும்பினால் எப்போது என நாங்கள் உங்களுக்குச் சொல்வோம். உங்கள் போராட்ட உணர்வுக்கு நன்றி,” என வோங் சின் ஹுவாட் என்ற அவர் சொன்னார்.
என்றாலும் பெர்சே 2.0 மூன்றாவது பேரணியை ஏப்ரல் 28ல் நடத்த தற்காலிகமாக முடிவு செய்துள்ளது என்றும் ஆனால் விவரங்கள் இன்னும் தயாராகவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறின.
அடுத்த செவ்வாய்க்கிழமை அது குறித்து இறுதி முடிவு செய்யப்படும் என அந்த வட்டாரங்கள் கூறின. ஏப்ரல் மாதம் பிஎஸ்சி அறிக்கை முழுமை பெறும்.
பிஎஸ்சி தனது எட்டுக் கோரிக்கைகளில் மூன்றை மட்டுமே ஏற்றுக் கொண்டிருப்பது குறித்த தனது ஏமாற்றத்தை கடந்த ஜனவரி மாதம் பெர்சே 2.0 தெரிவித்துக் கொண்டது. அழியா மை, முன்கூட்டியே வாக்களிப்பது, வாக்காளர் பட்டியலைத் தணிக்கை செய்வது ஆகியவை அந்த மூன்று கோரிக்கைகளாகும்.
பிஎஸ்சி அறிக்கை அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை வலியுறுத்தி பத்தாயிரக்கணக்கான மக்கள் கோலாலம்பூர் சாலைகளில் ஊர்வலமாகச் சென்ற ஒரு மாதம் கழித்து பிஎஸ்சி அமைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜுலை மாதம் 9ம் தேதி நிகழ்ந்த பெர்சே 2.0 பேரணிக்கு முதல் நாள் போலீசார் கோலாலம்பூருக்குச் செல்லும் எல்லா சாலைகளையும் மூடியதுடன் பேரணி நிகழ்ந்த போது மொத்தம் 1,600 பங்கேற்பாளர்களையும் கைது செய்தனர்.