புக்கிட் கெப்போங் சம்பவம் மீது ஏற்பாடு செய்யும் விவாதத்தில் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதினுடன் மோதுவதற்கு தாம் பாஸ் இளைஞர்களை அனுமதித்து விட்டு தாம் விலகிக் கொள்வதாக பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு இன்று அறிவித்துள்ளார்.
அம்னோ இளைஞர் பேராளருடன் மோதுவதற்கு பாஸ் இளைஞர்களே “மிகவும் பொருத்தமானவர்கள்” என அவர் மலேசியாகினி தொடர்பு கொண்ட போது கூறினார்.
மாட் சாபு என அழைக்கப்படும் அவர் அண்மையில் ஆற்றிய உரை ஒன்றின் போது 1950ம் ஆண்டு நிகழ்ந்த புக்கிட் கெப்போங் சம்பவம் மீது சர்ச்சையை கிளப்பினார்.
“நான் பாஸ் இளைஞர் பிரிவிடம் விட்டு விடுகிறேன். கைரி மிகவும் புத்திசாலியான மனிதர். நான் அவரை மதிக்கிறேன். அவர் பாஸ் இளைஞர் பிரிவைச் சந்திக்கட்டும்,” என்றார் அவர்.
தாம் அந்தச் சவாலை நிராகரிக்கவில்லை என வலியுறுத்திய அவர், “இளைஞர்கள் மற்ற இளைஞர்களுடன் விவாதம் நடத்தட்டும். அவர்கள் மிகவும் பொருத்தமானவர்கள்,” என்றார்.
ஜோகூர் மாநிலத்தில் அந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பதால் கைரியுடன் ஜோகூர் பாஸ் இளைஞர்கள் மோதுவது நல்லது என்றும் மாட் சாபு குறிப்பிட்டார்.
இம்மாத இறுதியில் கோத்தா பாருவில் உள்ள பாலாய் இஸ்லாமில் அந்த விவகாரம் பற்றி விவாதம் நடத்த மாட் சாபுவைத் தவிர வேறு யாருடனும் விவாதிக்க தாம் தயாராக இல்லை என கைரி நேற்று டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்த விவாதத்தில் சுதந்திரத்துக்கு முந்திய மலாயா வரலாறும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புக்கிட் கெப்போங் போலீஸ் நிலையத்தைத் தாக்கிய கிளர்ச்சிக்காரர் மாட் இந்ரா என்ற முகமட் இந்ரா உண்மையான வீரர் என்றும் அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு சேவை செய்த மலாய் போலீஸ் அதிகாரிகள் அல்ல என்றும் மாட் சாபு தமது உரையில் கூறிய பின்னர் அவர் கடும் விமர்சனத்துக்கு இலக்காகியுள்ளார்.