பிஎன், அது வெற்றிபெறும் வாய்ப்புள்ள தொகுதிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடுகளைச் செய்வதாக சீன நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்திக்குப் பிரதமர் பதிலுரைக்க வேண்டும் என்று டிஏபி எம்பி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறப்பு ஒதுக்கீடு என்ற வகையில் இவ்வாண்டு ரிம 513,957,100 ஒதுக்கப்பட்டுள்ளதாக புக்கிட் பெண்டேரா எம்பி லியு சின் தோங் கூறினார்.
நேற்று சின் சியு சிட் பாவில், ஆளும் கட்சி எந்தெந்த தொகுதிகளில் வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளதோ அந்தத் தொகுதிகளுக்கும் மட்டுமே தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்ற செய்தி முதல் பக்கத்தில் வெளிவந்திருந்தது.
வெற்றிவாய்ப்பு கிடையாது என்று கருதப்படும் தொகுதிகளுக்கு ஒதுக்கீடும் கிடையாது என்று அது கூறியிருந்தது.
அதே நேரத்தில், பிஎன்னுக்கு ஆதரவானதாக கருதப்படும் ஒவ்வொரு தொகுதியும் ரிம 2.5 மில்லியன்வரை மேம்பாட்டு நிதியைப் பெறும்.
அச்செய்தி உண்மையானால் அது இரண்டு “அதிர்ச்சிதரும் விசயங்களை” வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருப்பதாக லியு கூறினார்.
“முதல்முறையாக தொகுதிகளுக்குக் கொடுக்கப்படும் மேம்பாட்டு நிதி, பிஎன்னின் வெற்றி வாய்ப்பைப் பொருத்து இடத்துக்கு இடம் மாறுபடுகிறது என்பது ஒன்று.
“வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளுக்கு ரிம 2.5 மில்லியன் ஒதுக்கீடு என்பது உண்மையானால் அது கடந்த ஐந்தாண்டுகளாகக் கொடுக்கப்பட்டுவரும் தொகையைவிட ஐந்து மடங்கு அதிகமாகும்”, என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
இந்த நிதியையும் பிஎன் மாற்றணி எம்பிகளுக்குக் கொடுப்பதில்லை என்று லியு தெரிவித்தார். இந்த நிதி, பங்கிட்டுக் கொடுக்கப்படுவதற்காக பிரதமர் துறையின் செயலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவிடம் கொடுக்கப்படுகிறது.
“மாற்றணி வசமுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான மேம்பாட்டு நிதிகள் பெரும்பாலும் அத்தொகுதிகளின் அம்னோ தலைவர்களிடம் ஒப்படைக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
“2006 வரை ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு ரிம 500,000 கொடுக்கப்பட்டது. அந்த ஒதுக்கீடு ஆண்டுதோறும் உயர்ந்துகொண்டே வந்துள்ளது. நடப்பு ஒதுக்கீடு என்னவென்பது தெரியவில்லை”, என்றாரவர்.