வெளிநாட்டில் உள்ளவருக்கு வாக்களிக்க உரிமை, நஸ்ரி ஆதரவு

வெளிநாடுகளில் உள்ள மலேசிய வாக்காளர் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை விரிவுபடுத்த வேண்டும் என்ற தேர்தல் ஆணைய(EC)த்தின் பரிந்துரைக்கு பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் ஆதரவு தெரிவிக்கிறார்.

ஆனாலும், அதை அண்மையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக்குழு (பிஎஸ்சி) முதலில் விவாதிக்க வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.

வெளிநாட்டில் உள்ள அரசு ஊழியர்களும் முழுநேரம் படித்துவரும் மாணவர்களும் மட்டுமே அஞ்சல்வழி வாக்களிக்கலாம் என்றுள்ள நடப்பு நடைமுறை வெளிநாட்டில் வசிக்கும் எல்லா மலேசிய  வாக்காளருக்கும் விரிவுபடுத்தப்படுவதை நஸ்ரி வரவேற்றார்.

“அரசு ஊழியர்களுக்கு அந்த உரிமையைக் கொடுக்கும்போது ஏன் மற்ற மலேசியருக்குக் கொடுக்கக்கூடாது?”, என்றவர் வினவினார்.

என்ன, வெளிநாடுகளில் போடப்படும் அந்த வாக்குகளை வாக்களிப்பு நாளன்றே இங்குக் கொண்டுவந்து மற்ற வாக்குகளுடன் சேர்த்து எண்ண வேண்டும், அது ஒரு சிக்கலாக இருக்கலாம் என்றவர் கூறினார். 

பிஎஸ்சி-க்குக் காத்திராமலேயே இந்தப் பரிந்துரையையும் அடையாள மையையும் இசியும் அரசாங்கமும் நடைமுறைக்குக் கொண்டுவரலாம் என்று நஸ்ரி தெரிவித்தார்.

ஆனாலும் இதில் முடிவெடுக்கும் பொறுப்பைக் கட்சிசார்பற்ற பிஎஸ்சி குழுவிடம் விட்டுவிடவே அவர் விரும்புகிறார்.அதனால் அதை அமைச்சரவையின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல அவர் விரும்பவில்லை.

தேர்தல் சீரமைப்புக்காக மாற்றரசுக் கட்சியினரும் சமூக அமைப்புகளும் தொடர்ந்து கொடுத்து வந்த அழுத்தத்தின் காரணமாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்  பிஎஸ்சி-யைப் பரிந்துரைத்தார். அக்குழு, அக்டோபர் மூன்றில் தொடங்கும் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் அமைக்கப்படும்.

ஆனால் மாற்றரசுக்கட்சி, தேர்தல் சீரமைப்பில் நஜிப் உண்மையில் அக்கறை காட்டவில்லை என்பதால் பிஎஸ்சி-இல் இடம்பெறுவது பற்றி இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று கூறியுள்ளது.

அத்துடன் பிஎஸ்சி முன்வைக்கும் பரிந்துரைகளை நடைமுறைக்குக் கொண்டுவந்து அதன்பின்னரே தேர்தல் நடத்தப்படும் என்று நஜிப் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அது கோரிக்கை விடுத்துள்ளது.

அடையாள மையைப் பொறுத்தவரை அரசமைப்பில் திருத்தம் தேவையில்லை என்று நஸ்ரி கூறினார்.

“சட்டத்துறைத் தலைவரிடம்(ஏஜி) பேசி விட்டேன். அரசமைப்பில் திருத்தம் செய்ய வேண்டியதில்லை. ஆனால், பிஎஸ்சி அதை முதலில் விவாதிக்க வேண்டும்”, என்றாரவர்.

கடந்த மாதம் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அசீஸ் யூசுப் (வலம்) பேசும்போது அடையாள மையைப் பயன்படுத்த வேண்டுமென்றால் அரசமைப்புத் திருத்தம் அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதே காரணத்தைச் சொல்லித்தான், அவருக்குமுன் தேர்தல் ஆணையத் தலைவராக இருந்த அப்துல் ரஷிட்,  2008-இல் வாக்களிப்புக்கு நான்கே நாள்கள் இருந்தபோது அடையாள மையைப் பயன்படுத்தும் நடைகுறையை ரத்துச் செய்தார்.

அடையாள மை பயன்படுத்துவது அரசமைப்புப்படி வாக்காளருக்குள்ள வாக்களிக்கும் உரிமையை மீறுவதாக இருக்கலாம் ஏனென்றால் அரசமைப்பு, விரல் நகத்தில் அடையாள மையை இட்டுக்கொள்ள மறுக்கும் வாக்காளர்களையும் வாக்களிக்க அனுமதிக்கிறது என்று ரஷிட் கூறினார்.

அரசமைப்பில் திருத்தம் செய்வதுதான் இதற்குத் தீர்வு என்றாரவர். அப்போது அவர் சொன்னதை ஏஜி அப்துல் கனி பட்டேய்லும் ஆமோதித்தார். ஆனால், இப்போது அவர் மனம் மாறிவிட்டதாகத் தெரிகிறது என்றார் நஸ்ரி.

நாடாளுமன்ற அனுமதியின்றியே அடையாள மையைப் பயன்படுத்தலாம் என்று ஏஜி கூறினார் என்று நஸ்ரியை மேற்கோள்காட்டி ஆகஸ்ட் 28-இல் சின் சியு டெய்லி’ செய்தி வெளியிட்டிருந்தது.

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை வாக்களிப்பதைத் தடுக்க இதுவே சிறந்த வழி என்றும் அரசாங்கம் பயன்படுத்த நினைக்கும் கைரேகை பதிவைவிட இதற்காகும் செலவு குறைவு என்றும் அவர் கூறினார்.

TAGS: