அன்வார் இப்ராஹிமின் இரண்டாவது புதல்வி நுருல் நுஹா அன்வார் அடுத்த பொதுத் தேர்தலில் நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடலாம்.
பகுதி நகர்ப்புறக் கலப்புத் தொகுதியான அதில் போட்டியிடுவதற்குச் சாத்தியமான வேட்பாளராக நுஹாவை பிகேஆர் நிப்பொங் திபால் தொகுதி முன்மொழிந்திருப்பதை பினாங்கு பிகேஆர் தலைவர் மான்சோர் ஒஸ்மான் நேற்று உறுதி செய்தார்.
“ஒரு மாதத்திற்கு முன்பு அவரது பெயர் எழுப்பப்பட்டது. அவர் வேட்பாளரா இல்லையா என்பது இன்னும் இறுதி முடிவு செய்யப்படவில்லை. அடுத்த தேர்தலுக்கு முன்னதாக எல்லாம் அறிவிக்கப்படும்,” என மான்சோர் கூறியதாக சைனா பிரஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
என்றாலும் நுஹாவுக்கு அந்த வேலையில் ஆர்வம் இல்லை என இன்று காலை அவருடைய தந்தையார் இன்று டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.
நிபோங் திபாலில் நிறுத்தப்படக் கூடிய சாத்தியமுள்ள வேட்பாளர்களில் சீன வம்சாவளியைச் சேர்ந்த தொழில் நிபுணர்களும் அங்குவர் என பிகேஆர் நிபோங் திபால் தொகுதித் தலைவரும் சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினருமான உஸ்தாஸ் மாக்தார் ஷாபி கூறினார்.
அந்தத் தொகுதி முன்னாள் பிகேஆர் தலைவர்கள் வசம் உள்ளது
நிபோங் திபால் 2008ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பிகேஆர் கட்சியின் தான் தீ பெங் கைப்பற்றும் வரையில் அம்னோ கோட்டையாக இருந்து வந்தது.
அந்த தான் பின்னர் பிகேஆரிலிருந்து விலகி சுயேச்சையானார். பின்னர் அவர் அதே பிகேஆரிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ஜைட் இப்ராஹிம் தொடங்கிய கீத்தா என்னும் கட்சியில் இணைந்தார்.
நிபோங் திபால் தொகுதி மீது பக்காத்தான் ராக்யாட்டில் உள்ள மூன்று கட்சிகளுமே குறி வைத்துள்ளன. காரணம் அந்தத் தொகுதியின் வாக்காளர்களுடைய சம நிலையான இன விகிதாச்சாரமாகும்- 43.60 விழுகாட்டினர் மலாய்க்காரர்கள், 40.50 விழுக்காட்டினர் சீனர்கள், 15.80 விழுக்காட்டினர் இந்தியர்கள்.
அன்வாருக்கு நான்கு புதல்விகளும் ஒரு புதல்வரும் உள்ளனர். அவரது மனைவி வான் அஜீஸா வான் இஸ்மாயில் பிகேஆர் தலைவர் ஆவார். மூத்த புதல்வி நுருல் இஸ்ஸா, லெம்பா பந்தாய் எம்பி ஆவார். அவர் தேர்வு செய்யப்பட்ட நான்கு பிகேஆர் தலைவர்களில் ஒருவரும் ஆவார்.
வரைகலை வடிவமைப்பாளரான நுஹா அடுத்த தேர்தல் போட்டியிட்டால் அரசியலில் தடம் பதிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்தில் நான்காவது உறுப்பினராக இருப்பார்.