ஆயர்: ‘பகுதி பகுதியாக வெளியிடுவது’ முழுமையாக இருக்காது

இஸ்லாமிய விவகாரங்களுக்கான முன்னாள் சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலி, முஸ்லிம்கள் கிறிஸ்துவ சமயத்துக்கு மாற்றப்படுவதாகத் தாம் கூறிக் கொள்வதற்கு ஆதாரமாக இருக்கும் வீடியோவை “பகுதி பகுதியாக வெளியிடுவதற்குப்  பதில் முழுமையாக வெளியிட வேண்டும்” என கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் கேட்டுக் கொண்டுள்ளார்.

மதமாற்றம் செய்யப்பட்ட, தற்போது இஸ்லாத்துக்கு திரும்பி விட்ட முஸ்லிம் ஜோடி சம்பந்தப்பட்ட வீடியோவின் பகுதிகளை தாம் வெளியிடப் போவதாக இந்த வாரத் தொடக்கத்தில் ஹசான் அலி அறிவித்திருந்தார். முஸ்லிம்களை மதம் மாற்றுவதற்கு கிறிஸ்துவர்கள் பின்பற்றும் வழி முறைகளை அவை அம்பலப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

“அந்த வீடியோவைத் தயாரிப்பதற்கு அவருக்கு நீண்ட காலம் பிடித்துள்ளது என்று நான் கூற வேண்டும்,” மலாக்கா ஜோகூர் திருச்சபையின் தலைவருமான பால் தான் சொன்னார்.

“அது உண்மையானது என்றால் ஏன் பகுதிகளை மட்டும் வெளியிட வேண்டும் ?” என அவர் வினவினார்.

முஸ்லிம்களை கிறிஸ்துவர்கள் மதம் மாற்றுவது தொடர்பான ஆதாரத்தைக் காட்டுவதாக நீண்ட காலமாக தாம் அளித்து வரும் வாக்குறுதியை டாக்டர் ஹசான் நிறைவேற்ற வேண்டும். அவர் அந்த ஆதாரத்தை பகுதி பகுதியாகக் காட்டுவதற்குப் பதில் முழுமையாக வெளியிட வேண்டும்,” என்றார் அவர்.

“கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் டாக்டர் ஹசானிடம் ஏதுமில்லை. இப்போது தம்மிடம் வீடியோ இருப்பதாக அவர் சொல்கிறார். அதிலும் அவர் பகுதிகளை மட்டுமே வெளியிடப் போவதாகக் கூறுகிறார். பகுதி பகுதியாக வெளியிடும்  இந்த வேலை ஏன் ?” என அந்த ஆயர் வினவினார்.