போலீஸ் ஊழல் (‘Copgate’) விவகாரத்தில் ஊழல் அம்சங்களும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் அது தொடர்பான குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்ய எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு நிறுவனம் தயாராக இருக்கிறது.
“அது ஊழல் விவகாரமாக இருக்கும் வரையில் நாங்கள் அதனை அச்சமின்றியும் யாருக்கும் சாதகமாக இல்லாமாலும் விசாரிப்போம்.”
“ஆகவே நாங்கள் ஊழல் தொடர்பான எந்தப் புகாரையும் வரவேற்கிறோம்,” என எம்ஏசிசி தலைமை ஆணையர் அபு ஹாசிம் முகமட் கூறினார்.
முன்னாள் உயர் நிலை போலீஸ் அதிகாரி எழுப்பியுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு எம்ஏசிசி-யே சரியான அமலாக்க அமைப்பு என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறியுள்ளது பற்றி அவர் கருத்துரைத்தார்.
அந்தக் குற்றச்சாட்டுக்கள், முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவரைச் சம்பந்தப்படுத்துவதால் போலீசார் பாகுபாடு காட்டுவதாக புகார்கள் எழுவதைத் தவிர்ப்பதற்கு எம்ஏசிசி அந்த விசாரணையை நடத்த வேண்டும் என ஹிஷாமுடின் மக்களவையில் திங்கட்கிழமை கூறியிருந்தார்.