“தாக்கியவர்”, சேவலைப் பலி கொடுத்து சத்தியம் செய்ய வருமாறு வீ-க்கு சவால்

ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற சீன மொழிக் கல்விப் பேரணியின் போது தாம் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுவதை மூத்த குடிமகன் ஒருவர் மறுத்துள்ளார்.

அந்தப் பேரணியில் கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங்-கை தாக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 60 வயதான லீ சீ தாம் என்ற அவர் அந்த  விவகாரம் மீது இன்று போலீஸில் புகார் செய்துள்ளார்.

தாம் தமது கட்டை விரலை கீழ் நோக்கி மட்டுமே காட்டியதாகவும் துணை அமைச்சரைத் தாக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.

தாம் பொய் சொல்லவில்லை என்பதை நிரூபிப்பதற்கு சேவலைப் பலி கொடுத்துச் சத்தியம் செய்ய வருமாறு அந்த மூத்த குடிமகன், வீ-க்கு சவால் விடுத்தார்.

டோங் ஜோங் அதிகாரிகளை இன்று லீ சந்தித்து தமது நிலையை விளக்கியதாக அந்த அமைப்பின் துணைத் தலைவர் சாவ் சியூ ஹொங் கூறினார்.

பின்னர் லீ, டோங் ஜோங் அதிகாரிகளுடன் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் அந்த விவகாரம் மீது புகார் செய்தார். அங்கு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

வீ-யின் தோல்விகளுக்காக அவரைத் தாம் ஏசியதையும் ஏளனம் செய்ததையும் கட்டை விரலை கீழ் நோக்கி காட்டுவதற்கு தமது கையை நீட்டியதையும் லீ ஒப்புக் கொண்டதாக சாவ் தெரிவித்தார்.

‘கையை மடக்கவில்லை’

என்றாலும் வீ கூறியது போல தாம் ஒரு போதும் கையை மடக்கவில்லை என லீ உறுதியாகக் கூறினார் என்றும் சாவ் குறிப்பிட்டாஅர்.

“போலீசில் புகார் செய்த பின்னர் சென்ட்ரல் மார்க்கெட்டுக்கு அருகில் உள்ள Sin Sze Si Ya கோயிலில், தாம் பொய் சொல்லவில்லை என்பதை நிரூபிப்பதற்கு சேவலைப் பலி கொடுத்து சத்தியம் செய்ய வருமாறு லீ, வீ-க்குச் சவால் விடுத்தார்,” என்றும் சாவ் சொன்னார்.