துணை மந்திரி புசார் குறித்த யோசனை: கெடா கெரக்கான் இளைஞர் பிரிவு விளக்குகிறது

கெடா மந்திரி புசாருடைய வேலைச் சுமையைக் குறைப்பதற்காகவே துணை மந்திரி புசார் பதவியை உருவாக்கலாம் எனத் தான் யோசனை தெரிவித்ததாக அந்த மாநில கெரக்கான் இளைஞர் பிரிவு விளக்கியுள்ளது.

மந்திரி புசாருடைய கடமைகளை எடுத்துக் கொள்வதற்காக அல்ல என்று அதன் தலைவர் தான் கெங் லியாங் இன்று கூறினார்.

“நோய் அல்லது விபத்து எப்போது ஏற்படும் என்பது யாருக்கும் தெரியாது. இரண்டாவது தளபதி இருக்கும் போது குறைந்த பட்சம் எல்லாம் சீராக இருக்கும்,” என அவர் அலோர் ஸ்டாரில் நிருபர்களிடம் கூரினார்.

“வழக்கமான நேரங்களில் கூட துணை மந்திரி புசார், மந்திரி புசாருடைய வேலைச் சுமையைக் குறைக்க முடியும். மந்திரி புசாருக்கு கடமைகள் மிக அதிகம் என்பது நமக்குத் தெரியும்,” என்றார் அவர்.

அத்தகைய பதவியை உருவாக்குவது சுல்தானுடைய விருப்பத்தைப் பொறுத்தது என்பது, அந்த விவகாரத்தை தாமதப்படுவதற்குக் காரணமாக இருக்கக் கூடாது. விரும்பத்தகாத சம்பவம் ஏதும் நிகழுமானால் யாரும் அந்தப் பொறுப்பை உடனடியாக ஏற்க முடியாது என்றார் அவர்.

மாநில அரசாங்கத் தலைவர் நீண்ட காலத்துக்கு வேலை செய்ய முடியாத சூழ்நிலை உருவாகுமானால் மாநில நிர்வாகத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்த துணை மந்திரி புசார் பதவி உருவாக்கப்பட வேண்டும் என தான் ஏற்கனவே யோசனை கூறியிருந்தார்.

மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக்கிற்கு கடந்த ஜுலை மாதம் மாரடைப்பு ஏற்பட்டது. நடப்பு கெடா தலைமைத்துவத்தின் மீதும் மாநில ஆட்சிமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருடைய பணித் திறனிலும் முழு நம்பிக்கை கொண்டிருப்பதால் துணை மந்திரி புசார் பதவி தேவை இல்லை என நேற்று அஜிஸான் கூறினார்.

பெர்னாமா

TAGS: