பிகேஆர் பலவீனமான இணைப்பு அல்ல என்கிறார் அஸ்மின்

பிகேஆர் பக்காத்தான் ராக்யாட்டில் பலவீனமான இணைப்பு அல்ல. உண்மையில் அதுதான் வலுவானது என்று அதன் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறுகிறார்.

அவர் நேற்றிரவு கோத்தா கினாபாலுவில் 150க்கும் மேற்பட்ட பிகேஆர் உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் பேசினார்.

கடந்த ஒரு மாதமாக முக்கிய ஊடகங்கள் பிகேஆர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதைச் சுட்டிக் காட்டிய அஸ்மி, அதற்கு ஒரே ஒரு காரணத்தை மட்டுமே கூற முடியும் என்றார்- அதாவது பிகேஆர் வலுவடைந்து வருகிறது.

“நீங்கள் ஆர்டிஎம்-மையும் டிவி3 ஐயும் அன்றாடம் பாருங்கள். அவற்றிம் தலைப்புச் செய்திகள் அன்வார் அல்லது பிகேஆர்-ராக நிச்சயம் இருக்கும்.”

ஆனால் மலேசியாகினி தனது செய்திகளில் மிகவும் நியாயமாக நடந்து கொள்வதாக கோம்பாக் எம்பி-யுமான அஸ்மின் தெரிவித்தார்.

தொகுதி ஒதுக்கீடு மீதான பேச்சுக்கள் சரியான பாதையில் செல்கின்றன

பக்காத்தான் ராக்யாட்டில் தொகுதி ஒதுக்கீடுகள் மீதான பேச்சுக்கள் அடுத்த கட்டத்தை அடைந்துள்ளதாகவும் வேட்பாளர் பட்டியல் மீது இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பை பக்காத்தான் தலைமைத்துவம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அஸ்மின் அந்த நிகழ்வுக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

சபாவில் இந்த முறை தேர்தல் பக்காத்தான். பாரிசான் வேட்பாளர்களுக்கு இடையிலான நேரடிப் போட்டியாக இருக்கும் என்ற தகவலை அவர் உறுதி செய்தார். 2008 பொதுத் தேர்தலில் பல இடங்களில் மும்முனை அல்லது நான்கு முனைப் போட்டிகள் நிலவின.

சபா பிகேஆர்-ரில் உட்பூசல் நிலவிய காலம் முடிந்து விட்டதாகவும் அந்தக் கட்சியில் அதிகமான மக்கள் சேருவதைக் கருத்தில் கொண்டால் பிகேஆர்-க்கு நல்ல எதிர்காலம் இருப்பது தெரிவதாக சபா பிகேஆர் தலைவர் தாம்ரின் ஜைனி கூறினார்.

அம்னோ/பிஎன் -னில் காணப்படும் சர்வாதிகாரத்தைப் போல் அல்லாது கூட்டுத் தலைமைத்துவத்தை பிகேஆர் பின்பற்றுவதே ஆதரவு கூடுவதற்குக் காரணம் என அவர் சொன்னார்.

எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள பிகேஆர் தயாராக இருப்பதாகவும் தாம்ரின் சொன்னார்.

TAGS: