பக்காத்தான் சபா சரவாக் மீது நம்பிக்கை வைத்துள்ளது

மூன்று கட்சிகளைக் கொண்ட கூட்டணியான பக்காத்தான் சபாவிலும் சரவாக்கிலும் கூடுதலாக பத்து முதல் 20 இடங்களை வெல்ல முடியுமானால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவைக் கைப்பற்ற முடியும் என டிஏபி சோஷலிச இளைஞர் பிரிவுத் தலைவர் அந்தோனி லோக் நம்பிக்கை கொண்டுள்ளார்.

அவர் நேற்றிரவு கெப்போங்கில் டிஏபி நிதி திரட்டும் நிகழ்வு ஒன்றில் பேசினார். கடந்த தேர்தலில் 82 இடங்களை வென்ற பக்காத்தானுக்கு கூட்டரசு அரசாங்கத்தை அமைப்பதற்குக் கூடுதலாக குறைந்தது  30 இடங்கள் தேவைப்படுவதாக அவர் சொன்னார்.

“அதனை அடைவதற்கு நாம் ஜோகூர் மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகியவற்றில் இன்னும் பத்து முதல் 20 இடங்களைப் பிடிக்க வேண்டும்.”

ஆனால் எல்லாவற்றையும் விட முக்கியமானது சபாவும் சரவாக்கும் ஆகும். அந்த இரண்டு மாநிலங்களிலும் நாம் குறைந்தது 10 முதல் 20 இடங்களையாவது கைப்பற்ற வேண்டும்,” என்றார்  அவர்.

“ஆட்சி மாற்றம் ஊழலை விடை கொடுப்போம்” என்னும் கருப் பொருளைக் கொண்ட அந்த விருந்தில் 1,500 பேர் கலந்து கொண்டார்கள்.

நாடாளுமன்றத்தில் மொத்தம் 222 இடங்கள் உள்ளன. சாதாரணப் பெரும்பான்மையைப் பெறுவதற்கு 112 இடங்கள் தேவை.

பிஎன் ஆட்சியை வீழ்த்தும் நோக்கம் கொண்ட ஒருமித்த முயற்சிகளில் ஒரு பகுதியாக கெப்போங்கில் வசிக்கும் மக்கள் குறிப்பாக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மாற்றத்துக்கான செய்தியை மற்ற மாநிலங்களில் உள்ள தங்கள் நண்பர்களுக்குப் பரப்ப வேண்டும் என்றும் ராசா எம்பி-யுமான லோக் வலியுறுத்தினார்.

1982ம் ஆண்டு தொடக்கம் கெப்போங் அதன் எம்பி தான் செங் கியாவ் கீழ் டிஏபி கோட்டையாக இருந்து வருகிறது.

தியோ குடும்பத்திடம் மன்னிப்புக் கேளுங்கள்

லோக் தமது உரையில் பிஎன் கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதைக் குறிப்பிட்டுப் பேசினார். நஜிப் முதலில் காலஞ்சென்ற டிஏபி உறுப்பினர் தியோ பெங் ஹாக் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார் அவர்.

“சவப் பெட்டியை அணுகும் வரை கண்ணீர் விட வேண்டாம்” என்பது சீன முதுமொழியாகும். பிஎன் இப்போது விரக்தி அடைந்த நிலையில் இருப்பதால் மன்னிப்புக் கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.”

“ஆனால் அவர்கள் உண்மையானவர்களாக இருந்தால் தியோ பெங் ஹாக் குடும்பத்திடம் முதலில் மன்னிப்புக் கேட்க வேண்டும்,” என்றார் லோக்.

அந்த விருந்தில் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங், டிஏபி சிலாங்கூர் உதவித் தலைவர் தெங் சாங் கிம், தேர்தல் பிரச்சாரப் பிரிவுத் தலைவர் ஹியூ குவான் இயூ, டிஏபி ஷோசலிச இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் ஜெனிஸ் லீ இங் ஹா ஆகிய மூத்த பக்காத்தான் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஏமாற்றப்படும்

பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் டிஏபி அன்வாரை ஏமாற்றி விடும் என பிஎன் கூறுவதை அன்வார் தமது உரையில் சாடினார்.

“யார் இப்போது ஏமாற்றப்படுகின்றனர் என்பதே கேள்வி ஆகும். மக்களை ஏமாற்றுவது யார் ?(who is making a cow of the rakyat?),” என வினா எழுப்பிய தேசிய விலங்குக் கூட ஊழல் பற்றிக் குறிப்பிட்டார்.

“தலைவர் ஒருவரை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆகவே என்ன பிரச்னை ?”

“ஆனால் நீங்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டி உங்களை ஆதரிக்குமாறு நீங்கள் கேட்டுக் கொண்டால் அது தான் பிரச்னை,” என அவர் புன்னகையுடன் கூறினார்.

இதனிடையே மனுக்குல நடவடிக்கைகள் ஒன்றுக்கு பின்னிப் பிணைந்தவை என்ற கோட்பாட்டை ஹாடி அவாங் தமது உரையில் எடுத்துரைத்தார். எந்த மனிதனும் தீவு அல்ல என்றார் அவர்.

“ஒவ்வொரு இன வம்சாவளிக்கும் அதன் சொந்த பண்புகள் உள்ளன. ஒவ்வொருவருடைய பலத்தையும் நாம் ஒருங்கிணைக்க முடிந்தால்  நாம் வலிமையான சக்தியை நிர்மாணிக்க முடியும்.”

நாம் அதனைச் செய்வதற்கு நமது நாட்டில் இனவாதமும் இன அடிப்படையிலான கட்சிகளும் தொடர்ந்து இயகுவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது.”

ஹுடுட் சட்ட அமலாக்கம் முஸ்லிம் அல்லாதாரின் வாழ்க்கை மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என மாராங் எம்பி-யுமான அவர் வலியுறுத்தினார்.

TAGS: