பேரணியின் போது பெர்க்காசா தாக்கியதாக வீடியோ ஒளிப்பதிவாளர் கூறிக் கொண்டுள்ளார்

கொம்தாரில் பெர்க்காசா ஏற்பாடு செய்த பேரணி ஒன்றை ஒளிப்பதிவு செய்யும் கடமையில் ஈடுபட்டிருந்த போது பெர்க்காசா தமக்கு எதிராக வன்முறையாக நடந்து கொண்டதாக பினாங்கு அரசாங்கத் தகவல் துறையின் ஊழியர் ஒருவர் போலீஸில் புகார் செய்துள்ளார்.

கொம்தார் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் வெள்ளிக் கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு பெர்க்காசா உறுப்பினர் ஒருவர் தமது கால்களை இரண்டு முறை உதைத்தாக முதலமைச்சர் லிம் குவான் எங் அலுவலகத்தில் பணியாற்றும் வீடியோ ஒளிப்பதிவாளரான லிலியன் சான் கூறினார்.

அந்த நிகழ்வை பதிவு செய்யுமாறு தமது எஜமானர் யாப் லீ யிங் தமக்கு ஆணையிட்டதாகச் சான் குறிப்பிட்டார்.

அந்த நிகழ்வின் போது பாயான் முத்தியாராவில் பள்ளிவாசல் ஒன்றுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலம் விற்கப்பட்டதாக அல்லது காணாமல் போனதாகக் கூறப்படுவது மீது விளக்கமளிக்க ஒரு வார அவகாசத்தை பெர்க்காசா லிம்-முக்கு வழங்கியது.

“நான் இரண்டாவது முறையாக உதைக்கப்பட்ட பின்னர் பினாங்கு பெர்க்காசா இளைஞர் தலைவரான- ரிசுவான் அஸுடினிடம் ஏன் என்னை உதைத்தீர்கள்,” என வினவியதாக சான் சொன்னார். அவர் மலேசியாகினி பயிற்சி அளித்துள்ள குடிமக்கள் பத்திரிக்கையாளரும் ஆவார்.

“அவர் எனக்குப் பதில் அளிக்கவில்லை. அந்த நேரத்தில் போலீசாரும் கொம்தார் பாதுகாப்பு ஊழியர்களும்  மாநில அரசாங்க அலுவலகங்கள் அமைந்துள்ள அந்தப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு அவர்களுக்கு உத்தரவிட்டுக் கொண்டிருந்தனர்,” என அவர் மேலும் கூறினார்.

30 பேர் கொண்ட அந்தக் குழு மாநில அரசாங்க அலுவலகக் கட்டிடத்திற்கு நுழைந்து லிம்-மைச் சந்திக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

அந்தக் குழுவினர் முதலமைச்சர் அலுவலகம் அமைந்துள்ள 28வது மாடிக்குச் செல்ல பாதுகாப்பு ஊழியர்கள் அனுமதிக்கவில்லை.  

போலீசில் புகார் செய்த பின்னர் சான் மருத்துவரை சென்று கண்டார். அவரது கால்களில் வலி ஏற்பட்டுள்ளதாக மருத்துவச் சான்றிதழ் அவருக்குக் கொடுக்கப்பட்டது.

அந்த அமைப்பு தமக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தியுள்ளது இது இரண்டாவது முறை எனச் சான் குறிப்பிட்டார்.

முதலாவது சம்பவம் பிப்ரவரி 26ம் தேதி எஸ்பிளனேடில் 500 பேர் கலந்து கொண்ட லினாஸ் எதிர்ப்புப் பேரணியின் போது நிகழ்ந்தது.

கெபெங்கில் அமையும் லினாஸ் தொழில் கூடம் அணுக் கதிரியக்க கசிவு அபாயத்தைக் கொண்டுள்ளதை ஆட்சேபிக்கும் வகையில் அதே நாளன்று குவாந்தானில் நடத்தப்பட ஹிம்புனான் ஹிஜாவ் பேரணிக்கு ஆதரவாக சுவாராம் அந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

லிம் உரையாற்றிய பின்னர் அங்கு மூண்ட குழப்பத்தில் குவோங் வா யிட் போ என்ற உள்ளூர் நாளேட்டின் இரண்டு நிருபர்கள் காயமடைந்தனர்.

அந்தச் சம்பவத்தின் போது ரிசுவானுடன் இருந்த ஒருவர் தம்முடைய கேமிராவைப் பிடுங்கிக் கொண்டதாகவும் சான் சொன்னார்.

“மாநில அரசாங்க ஊழியர் என்ற முறையில் கடமையில் ஈடுபட்டிருந்த போது நான் ஒரு முறை அல்ல இரண்டு முறை தாக்கப்பட்டதால் போலீசில் புகார் செய்கிறேன்,” என்றார் அவர்.

வேண்டுமென்றே கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக குற்றவியல் சட்டத்தின் 323வது பிரிவின் கீழ் சான் சமர்பித்த வழக்கு விசாரிக்கப்படுவதாக போலீஸ் புலனாய்வு அதிகாரியான சைமன் கெண்ட் கூறினார்.