மதம் மாறி மீண்டும் திரும்பியவர் எனக் கூறப்பட்ட ஒருவர், தமது கிறிஸ்துவக் குழு முஸ்லிம்களை மதம் மாற்றும் நோக்கத்துடன் உஸ்தாஜ்களை போன்று மாறுவேடம் போட்டு அவர்களை அணுகியதாக இன்று கூறியிருக்கிறார்.
முஸ்லிம்களை மதம் மாற்றுவதற்கான முயற்சிகளுக்கு அது ஆதாரம் என கோம்பாக் செத்தியா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ஹசான் அலி இன்று வெளியிட்ட வீடியோவில் ராம்லி அப்துல்லா(புனை பெயர்) அந்தச் சாட்சி என்று குறிப்பிட்டார்.
சில ‘orang putih’ (வெள்ளையர்கள்)க்களும் அடங்கிய அந்த மக்கள் ketayap(தொப்பி), jubah (மேலங்கிகள்) ஆகியவற்றை அணிந்து முஸ்லிம்களுக்கு அணுக்கமாக இருக்கும் பொருட்டு பள்ளிவாசல்களுக்குச் செல்வர் என்றும் ராம்லி கூறினார்.
“அவர்கள் மெதுவாக ஊடுருவுவது இப்படித்தான். அவர்கள் முதலில் முஸ்லிம்களை அணுகும் போது பைபிளைப் பயன்படுத்துவது இல்லை. ஆனால் திருக்குர் ஆனை அவர்கள் பயன்படுத்துவர். இதுதான் பச்சோந்தி முறை என அழைக்கப்படுவதாகும்,” எனக் கூறிக் கொண்ட ராம்லி மதம் மாறிய பின்னர் அந்த அமைப்புடன் இணைந்து வேலை செய்துள்ளார்.
முஸ்லிம் சமூகத்தை அணுகும் பொருட்டு கிறிஸ்துவ குழுக்கள் முஸ்லிம்களைப் போன்று மாறுவேடம் அணிந்து செல்வதாக ஏற்கனவே ஹசான் கூறியிருக்கிறார்.