‘பலவீனமான’ சுக்ரி புகார் செய்வதை நிறுத்த வேண்டும் என்கிறார் நஸ்ரி

சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் ஊழல் வழக்குகளை நிராகரிக்கிறது என புகார் சொல்வதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) துணை ஆணையர் (நடவடிக்கைகள்) முகமட் சுக்ரி அப்துல் நிறுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் சாடியிருக்கிறார்.

“சுக்ரி பலவீனமான மனிதர் என்று நான் நினைக்கிறேன். அவர் வெளிப்படையாக புகார் செய்யக் கூடாது”, என நஸ்ரி கடந்த சனிக்கிழமை கோலா கங்சாரில் சொன்னதாக சின் சியூ ஜிட் போ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

“உண்மையில் பொது மக்களுக்கு அவர் எந்த விளக்கமும் தர வேண்டிய அவசியமே இல்லை. காரணம்  ஒருவர் மீது வழக்குப் போடுவது சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்தின் வேலையாகும்.”

 ‘புலனாய்வு செய்வது மட்டுமே அவரது வேலை. இது மக்களைக் குழப்பாது என நான் நம்புகிறேன்.”

சுக்ரி எதிர்காலத்தில் இது போன்ற அறிக்கைகளை வெளியிடக் கூடாது என்றும் நஸ்ரி கூறினார்

எம்ஏசிசி தன்னிடம் கொண்டு வரப்படும் எல்லா ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களையும் புலனாய்வு செய்வதாகவும் ஆனால் போதுமான ஆதாரம் இல்லை என்ற காரணத்தினால் அவற்றை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் மறுப்பதாகவும் சுக்ரி கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த கருத்தரங்கு ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

‘ஊழல் குற்றச்சாட்டு பெருத்த அவமானத்தைக் கொண்டு வரும்’

ஊழல் குற்றச்சாட்டு குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பெருத்த அவமானத்தை கொண்டு வரும் என்பதால்  சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டியுள்ளது என விளக்கிய நஸ்ரி வலுவான ஆதாரம் இருந்தால் மட்டுமே எந்த விவகாரமும் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்றார்.

“அந்த வழக்கு வலுவாக இருப்பதாக புலனாய்வு அதிகாரி கருதலாம். ஆனால் அதில் இன்னும் பலவீனம் இருப்பதாக அரசு வழக்குரைஞர் நினைக்கலாம்,” என சட்டத் துறைக்குப் பொறுப்பான அந்த அமைச்சர் சொன்னதாகவும் சின் சியூ செய்தி வெளியிட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி இல்லை எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் அதுவும் மக்களை ஆத்திரமடையச் செய்யும் என்றும் நஸ்ரி சொன்னார்.

இதனிடையே நீதிமன்றத்தில் குற்றம் சாட்டுவதற்கு சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் மறுத்துள்ள தனி நபர்கள் பட்டியலை வெளியிடுமாறு எம்ஏசிசி-யை டிஏஎபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டுள்ளார்.

எம்ஏசிசி பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை அறிய மக்களுக்கு உரிமை உண்டு என்றார் அவர்.

நேற்று பத்து பகாட்டில் இருந்த லிம்  சுக்ரியின் அறிக்கை பற்றிக் குறிப்பிட்ட போது அவ்வாறு கேட்டுக் கொண்டதாக நன்யாங் சியாங் பாவ் தகவல் வெளியிட்டுள்ளது.