போலீஸ் நிலையத்தில் தாக்குதலும் பாலியல் தொல்லையும்

மார்ச் 24 ஆம் தேதியில் ஸ்ரீ பெட்டாலிங் போலீஸ் நிலையத்தில் விசாரிக்கப்பட்டபோது தாம் தாக்கப்பட்டதோடு பாலியல் தொல்லைக்கும் ஆளாக்கப்பட்டதாக வணிகப் பெண்ணானவர் போலீஸ் புகார் செய்துள்ளார்.

மாண்டெரின் மொழியில் பேசிய அப்பெண் லிம் ஹூய் ஹூய் கூறினார்: “நிலையத்தில் கடமையிலிருந்த ஒரு பெண் அதிகாரி சோதனை செய்வதற்காக ஒரு பிளாஸ்டிக் போத்தலில் என்னை சிறுநீர் கழிக்கச் சொன்னார், ஆனால் எனது கைகள் பின்பக்கம் விலங்கிடப்பட்டிருந்தன.

“நான் எப்படி எனது கால்சட்டையைக் கழற்ற முடியும் என்று அந்த அதிகாரியிடம் கேட்டபோது, அவர் எனது மார்பை இறுக்கி அழுத்தி விட்டு, நீ செய்துதான் ஆக வேண்டும் என்று கூறினார்.”

நான்கு குழந்தைகளுக்கு தாயான லிம் விலங்கிடப்பட்டிருந்தபோது உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டிருந்த வீக்கங்கள், காயங்கள் ஆகியவற்றின் படங்களைக் காட்டினார்.

இன்று டிஎபி செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோ மற்றும் அவரது வழக்குரைஞர் எரிக் டான் போக் ஆகியோருடன் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தாம் கடந்த வியாழக்கிழமை ஒரு போலீஸ் புகார் செய்ததாக லிம் கூறினார்.

மார்ச் 24 ஆம் தேதி கோலாலம்பூர் கூச்சாய் பார்க்கிலுள்ள மேபேங்க் கிளைக்கு காரில் சென்று கொண்டிருக்கையில் தனக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த வண்டியிலிருந்து அதன் விளக்குகள் ஒளியை வீசிக் கொண்டிருந்தன. அப்போதிலிருந்து ஜாலான் கிளாங் லாமாவிலுள்ள பெட்டாலிங் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டவரையில் நடந்த சம்பவங்களை லிம் விளக்கினார்.

“நான் அங்கு கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இருந்தேன். அவர்கள் எனது வாக்குமூலத்தை பதிவு செய்யவில்லை அல்லது நான் போலீஸ் புகார் செய்யவும் அனுமதிக்கப்படவில்லை. நான் இனிமேலும் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. எனது குழந்தைக் காண வீட்டிற்குப் போக வேண்டும் என்று அவர்களிடம் கூறினேன்.

“அப்போதுதான் ஒரு பெண் போலீஸ் அதிகாரி என்னை தடுத்து நிறுத்தி எனது கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு எனக்கு விலங்கிட்டார். அங்கிருந்த இதர அதிகாரிகளிடம் நான் அங்கிருந்து தப்பிக்க முயன்றதாக கூறினார். அவர்கள் அனைவரும் என்னைப் பிடித்துக் கீழே தள்ளி என் மீது காலை வைத்து நின்றனர்”, என்று லிம் மேலும் கூறினார்.

“பிறகு ஸ்ரீ பெட்டாலிங் போலீஸ் நிலையத்தில் விலங்கிடப்பட்ட நிலையில் சிறுநீர் எடுக்கச் சொன்னார்கள். பெண் போலீஸ் அதிகாரியால் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டேன். சிறுநீர் சோதனையில் எதுவும் காணப்படவில்லை.”

“போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட லிம்முக்கு அங்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து நான் மிகுந்த ஆச்சரியம் அடைகிறேன்.

“அவரின் புகார் கடுமையாக எடுத்துக்கள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை”, என்று தெரசா கூறினார்.

இவ்விவகாரம் குறித்து தாம் லிம்முடன் சென்று பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட தலைமையக துணைத் தலைவரை சந்திக்கப் போவதாகவும் புகிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் ஒழுங்குமுறை பிரிவில் புகார் செய்யப் போவதாகவும் தெரசா கூறினார்.

இன்று பின்னேரத்தில், செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியளரையும் லிம்மையும் சந்தித்ததாக பிரிக்பீல்ட்ஸ் துணை ஒசிபிடி அய்டா அப்துல் ஹமிட் மலேசியாகினி தொடர்பு கொண்டபோது கூறினார்.

லிம்மின் புகார் குறித்து விசாரிக்கப்படும் ஆனால் எந்தப் பிரிவு அதனை மேற்கொள்ளும் என்று இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று அய்டா கூறினார்.

மேலிட உத்தரவுக்காக இன்னும் காத்திருக்கிறோம் என்று அவர் மேலும் கூறினார்.

தாக்கினார் என்று கூறப்பட்டுள்ள போலீஸ் அதிகாரி தற்போதைக்கு இடைநீக்கம் செய்யப்பட மாட்டார், குறைந்தது விசாரணை அறிவிக்கப்படும் வரையில் என்று அதிகாரி மேலும் கூறினார்.

“புகார் செய்யப்படும் ஒவ்வொரு தடவையும் போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டால், பின்னர் கடமையில் இருப்பதற்கு நம்மிடம் அதிகாரிகள் இருக்கமாட்டார்கள்.”