பாதி வழியில் ஒட்டுநரை மாற்ற வேண்டாம் என்கிறார் நஜிப்

நாட்டின் உருமாற்றத் திட்டங்கள் பாதி வழியில் சென்று கொண்டிருக்கும் வேளையில் நாட்டின் ஒட்டுநரை மாற்ற வேண்டாம் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மலேசியர்களை வேண்டிக் கொண்டிருக்கிறார்.

நேற்றிரவு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமது உரையில் நஜிப் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒடிக் கொண்டிருக்கும் வாகனம் ஒன்றுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், நடப்பு ஒட்டுநர் நாட்டை சரியான பாதையில் வைத்துள்ளதாக சொன்னார்.

ஒதுக்கப்பட்ட நேரத்தில் அந்த வாகனம் இலக்கை அடைவதை உறுதி செய்ய திறமை நிரூபிக்கப்பட்டு விட்ட ஒட்டுநரை மாற்றி சோதனை செய்ய வேண்டாம்.”

“பாதி வழியில் அபாயகரமான, ஐயத்துக்குரிய ஒட்டுநரை அவருக்கு பதில் நியமிக்க வேண்டாம். தவறான தேர்வை செய்ய வேண்டாம்,” என நஜிப் மக்களுக்கு கூறினார்.

பிரதமர் பதவியை ஏற்ற மூன்றாம் ஆண்டு நிறைவை இன்று நஜிப் கொண்டாடுகிறார். “சந்திரனையும் நட்சத்திரங்களையும் தருவதாக வாக்குறுதி அளிக்கும்” ஆனால் அவற்றை தர முடியாத சில தரப்புக்களைத் தேர்வு செய்ய வேண்டாம் எனவும் நஜிப் எச்சரித்தார்.

நஜிப் தமது ‘ரிப்போர்ட் கார்டை’ காண்பித்தார்

நஜிப் தமது உரையில் நிர்வாகத்தின் ‘ரிப்போர்ட் கார்டை’யும் காண்பித்தார். தமது தலைமைத்துவத்தின் கீழ் நிகழ்த்தப்பட்டுள்ள சாதனைகளையும் அமலாக்கப்படும் அரசாங்க உருமாற்றத் திட்டம், பொருளாதார உருமாற்றத் திட்டம் ஆகியவற்றையும் பிரதமர் விவரித்தார்.

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதார உருமாற்றத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது நாட்டின் தனி நபர் வருமானம் 6,700 அமெரிக்க டாலராக இருந்தது. இப்போது அது 9,700 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது”

“இதனிடையே 2011ம் ஆண்டுக்கான பதிவுகளின் படி நாட்டிம் மொத்த உள் நாட்டு உற்பத்தி 852.7 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது. அதன் விளைவாக அரசாங்கம் சுதந்திரத்துக்குப் பின்னர் என்றும் இல்லாத அளவு அதாவது 185.4 பில்லியன் ரிங்கிட் வருமானத்தை ஈட்டுவதற்கு வழி ஏற்பட்டுள்ளது,” என்றும் நஜிப் குறிப்பிட்டார்.

அரசியல் நிலையில் நாட்டின் மூன்று அவசர காலச் சட்டங்களையும் கட்டுப்படுத்த வசிப்பிடச் சட்டம், நாடு கடத்தும் சட்டம் ஆகியவற்றை ரத்துச் செய்வதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கையையும் அவர் சுட்டிக் காட்டினார்.

“எல்லாவற்றுக்கும் மேலாக பல்கலைக்கழக பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்திலும் அச்சுக்கூட வெளியீட்டுச் சட்டத்திலும் மாற்றங்களை செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் தொடங்கியுள்ளது.”

“அரசாங்கம் இன்று ஜனநாயகக் களத்தில் போட்டியிட அஞ்சவில்லை. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை நீக்கியது இந்த அரசாங்கம் அல்லவா ?” என்றும் நஜிப் வினவினார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முன்னைய பிரதமர் அப்துல்லா அகமட் படாவியிடமிருந்து பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நஜிப், தேர்தல் களத்தில் இன்னும் மக்களுடைய கட்டளையைப் பெறவில்லை. பொதுத் தேர்தல் இவ்வாண்டு முன்கூட்டியே நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS: