பிரதமரின் பயணம்: தனிப்பட்டதா, அதிகாரப்பூர்வமானதா?

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தம் ஆஸ்திரேலியப் பயணத்தைச் சுருக்கிக்கொண்டு நாடு திரும்பிவிட்டார். ஆனால், அந்தப் பயணம் அதிகாரப்பூர்வமானதா,  அதற்குப் பணம் கொடுப்பது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

பிரதமர், பெர்த் நகரில் மலேசிய மாணவர்களைச் சந்தித்துள்ளார் என்றாலும் அது ஒரு தனிப்பட்ட பயணமே என்கிறார் கொம்டார் சட்டமன்ற உறுப்பினர் இங் வை ஏய்க். அதனால் பயணத்துக்கு ஆன செலவை நஜிப்தான் ஏற்க வேண்டும் என்பது அவருடைய வாதம்.  

“நஜிப், தனியார் விமானமொன்றில் சென்றிருக்கிறார். அதனால் பயணச் செலவுகளை அவர்தான் ஏற்க வேண்டும். அரசாங்க விமானத்தில் சென்றால் செலவுகளை அரசாங்கம் ஏற்கும்”, என்றாரவர்.

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் அதிகாரப்பூர்வ வேலைகளாக இருந்தால்கூட சிக்கன வகுப்பில்தான் பயணம் செய்கிறார் என்பதை இங் சுட்டிக்காட்டினார்.

நஜிப், ஆஸ்திரேலியாவுக்குச் சென்றது யாருக்கும் தெரியாது. ஆகஸ்ட் 31-இல், பிரதமரின் விமானத்தை பெர்த்தில் கண்டதாக மலேசியாகினி வாசாகர் ஒருவர் தெரிவித்தபோதுதான் அவர் அங்கு சென்றிருந்தது தெரிய வந்தது.

செப்டம்பர் 3-இல்,சோமாலியாவில் பெர்னாமா படப்பிடிப்பாளர் துப்பாக்கிச் சூடுபட்டு இறந்துபோனதால் பிரதமர் அவருடைய பயணத்தைச் சுருக்கிக்கொண்டு நாடு திரும்புகிறார் என்று பெர்னாமா அறிவித்தபோதுதான் அது பற்றி அதிகாரப்பூர்வமாக தெரிய வந்தது.

பின்னர் பிரதமர் அலுவலகம், ஹரி ராயா, தேசிய நாள் விடுமுறையைப் பயன்படுத்திக்கொண்டு நஜிப் அவருடைய கால்முட்டிக்கு உடலியல் சிகிச்சை பெற ஆஸ்திரேலியாவுக்குச் சென்றதாக விளக்கம் அளித்தது.

அரசாங்கம் செலவுமிக்க வெளிநாட்டுப் பயணங்களையெல்லாம் அதிகாரப்பூர்வ பயணங்கள் என்ற பெயரிலே மேற்கொள்வதாக மாற்றரசுக் கட்சிகள் அடிக்கடி குறைகூறி வந்துள்ளன. ஆனால், அரசு அதை மறுத்துள்ளது.

ஜூன் மாதம் பத்து எம்பி தியான் சுவா-வுக்கு அளிக்கப்பட்ட பதில் ஒன்றில் 2010-இல் நஜிப் மற்றும் அவரின் துணைவியாரின் அதிகாரப்பூர்வ பயணங்களுக்கு ரிம5.4மில்லியன் செலவிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 2008-இல் அப்துல்லா அஹமட் படாவி பிரதமராக இருந்தபோது அவருடைய பயணச் செலவு ரிம1.74மில்லியனாக இருந்தது.

TAGS: