தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி)அறிக்கை: தேர்தல் ஆணையம் (இசி) வழங்கியுள்ள யோசனையின் படி, வாக்காளர்களாகத் தங்களைப் பதிந்து கொண்டுள்ள வெளிநாடுகளில் வாழும் மலேசியர்களும், முந்திய ஐந்து ஆண்டுகளில் ஒரு முறையாவது தாயகம் திரும்பியுள்ளவர்களும் மட்டுமே அஞ்சல் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளத் தகுதி பெறுவர்.
அந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்ட பிஎஸ்சி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அதனை அமலாக்குவது பற்றி விவாதிக்க இசி-க்கு மூன்று மாத அவகாசத்தை வழங்கியது.
நாடாளுமன்றத்தில் இன்று பிஎஸ்சி அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அந்த நடவடிக்கை சட்டம் வழியாகவும் அமலாக்கப்பட வேண்டும் என்றும் அது கூறியது.
அஞ்சல் வாக்காளராகப் பதிவு செய்து கொள்வதற்கு வாக்காளர் விண்ணப்பிக்கும் தேதியிலிருந்து அந்த ஐந்தாண்டு காலம் கணக்கிடப்பட வேண்டும் என்றும் பிஎஸ்சி தெரிவித்தது.
நடப்புத் தேர்தல் முறை, போக்குவரத்து ஆகியவை காரணமாக வெளிநாடுகளில் உள்ள மலேசியத் தூதரகங்களில் வெளிநாடுகளில் வசிக்கும் மக்களை வாக்களிக்க அனுமதிப்பது சிரமம் என்பதையும் அது சுட்டிக் காட்டியுள்ளது.
“அந்தக் கருத்தை வெளியுறவு அமைச்சிடமிருந்து பெறப்பட்டுள்ள தகவலும் ஆதரிக்கிறது,” என அந்த அறிக்கை குறிப்பிட்டது.
இசி வெளிநாட்டு வாக்காளர்களுக்கு வாக்குச் சீட்டுக்களை அஞ்சல் வழி அனுப்புவது போன்ற மாற்று வழிகளை பரிசீலிக்க வேண்டும் என்றும் பிஎஸ்சி யோசனை கூறியது. பின்னர் மலேசியத் தூதரகங்கள் அதனைச் சேகரித்து எண்ணப்படுவதற்காக இசி தலைமையகத்துக்கு அனுப்பலாம்.
வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் வாக்களிக்க அனுமதிக்கும் வகையில் அவர்களுக்கு ‘இல்லாத வாக்காளர்கள்’ தகுதி கொடுக்கப்பட வேண்டும் என்பது தேர்தல் போராட்ட அமைப்பான பெர்சே 2.0 சமர்பித்த எட்டுக் கோரிக்கைகளில் ஒன்றாகும்.
வெளியூர்களில் வசிக்கும் வாக்காளர்கள் குறிப்பக தீவகற்ப மலேசியாவில் வேலை செய்யும் சபா, சரவாக்கைச் சேர்ந்தவர்கள் தங்கள் தொகுதிகளுக்குத் திரும்பாமல் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என பெர்சே 2.0 விடுத்த கோரிக்கைக்கு பல இடர்பாடுகள் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போக்குவரத்து, மனித வளத் தேவைகள் அடிப்படையில் அது பெரும் சிரமத்தை கொண்டு வரும். அத்துடன் நடப்பு சட்ட விதிகளும் அதன் அமலாக்கத்துக்கு கூடுதல் சிரமங்களை ஏற்படுத்தும்.
கூட்டரசு அரசமைப்பின் 119 வது பிரிவின் கீழ் வாக்காளர்கள் தாங்கள் பதிந்து கொண்ட தொகுதிக்கு வெளியில் வாக்களிப்பதற்கு அனுமதிக்கவில்லை என இசி குறிப்பிட்டது.
ஆகவே அந்த யோசனை குறித்து அரசமைப்பு விதிகளிலும் தேர்தல் சட்டங்களிலும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமா என்பதும் ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது என்றும் அது கூறியது.
வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களுக்குப் பின்பற்றப்படுவது போன்ற வழிகளை வெளியூர் வாக்காளர்களுக்கு இசி பரிசீலிக்கலாம் என்றும் பிஎஸ்சி பரிந்துரைத்தது. அதன் அமலாக்கத்துக்கான காலக் கெடு ஏதும் அது குறிப்பிடவில்லை.
இசி ஊழியர்கள், ஊடகவியலாளர்களுக்கு அஞ்சல் வாக்குகள்
பிஎஸ்சி-யில் அங்கம் பெற்றுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களான அந்தோனி லோக்( டிஏபி-ராசா), ஹாட்டா ராம்லி ( பாஸ் கோலக் கிராய்), அஸ்மின் அலி (பிகேஆர்-கோம்பாக்) ஆகியோர் ஆட்சேபித்த போதிலும் வாக்களிப்பு தினத்தன்று கடமையில் இருக்கும் இசி ஊழியர்களும் ஊடகவியலாளர்களும் அஞ்சல் வாக்காளர்களாகப் பதிந்து கொள்வதற்கு அனுமதிக்க பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டனர்.
அடுத்த பொதுத் தேர்தலில் பாதுகாப்புப் படையினருக்கு அறிமுகம் செய்யப்படும் -முன் கூட்டியே வாக்களிக்கும் முறையின் கீழ்- அவர்கள் வாக்குகளை செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அந்த மூவரும் கோரினர்.
அவர்களுடைய கோரிக்கையை, தேர்தல் பிரச்சாரக் காலத்தின் போது நாடு முழுவதும் அனுப்பப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்கள் அனைவரையும் முன் கூட்டியே வாக்களிப்பதற்காக குறிப்பிட்ட சில இடங்களில் ஒன்று சேர்ப்பது முடியாத காரியம் எனக் கூறி இசி நிராகரித்து விட்டது.
மாக்ஸிமுஸ் ஜானிட்டி ஒங்கிலி (தலைவர் பிஎன்- கோத்தா மாருது) மிகமட் ராட்சி ஷேக் அகமட் (பிஎன் -கங்கார்) போங் சான் ஒன் (பிஎன் -அலோர் காஜா ), அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி (பிஎன் -காப்பிட்), பி கமலநாதன் ( பிஎன் -உலு சிலாங்கூர்), வீ சூ கியோங் (சுயேச்சை- வாங்சா மாஜு ) ஆகியோர் மற்ற பிஎஸ்சி உறுப்பினர்கள் ஆவர்.