பராமரிப்பு அரசாங்கம் மீது மூன்று மாதங்களில் வழிகாட்டிகள் தயாரிக்கப்படும்

நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்பட்டாலும் பராமரிப்பு அரசாங்கத்தின் பணிகள் மீது தெளிவான வழிகாட்டிகள் இருக்க வேண்டும் என பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு ஒப்புக் கொண்டுள்ளது.

அதன் அடிப்படையில் அது இசி தேர்தல் ஆணையத்துக்கு அந்த வழிகாட்டிகளையும் கூட்டரசு, மாநில நிலைகளில் பராமரிப்பு அரசாங்கத்துக்கான நன்னடத்தை முறைகளையும் தயாரிப்பதற்கு இன்று  தொடக்கம் மூன்று மாத அவகாசத்தை அது இசி-க்கு வழங்கியுள்ளது.

நாடாளுமன்றம் அதன் ஐந்து ஆண்டு தவணைக் காலத்தில் நான்காவது ஆண்டில் நுழையும் போதுதான் கலைக்கப்பட முடியும் என வரையறுக்கும் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அந்தக் குழு பரிந்துரை செய்தது.

அதன் வழி சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்புக்களும் தேர்தலுக்கு  ஆயத்தமாக முடியும்.

தற்போது நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான தேதியை நிர்ணயம் செய்வதற்கு பிரதமருக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரக் காலம் குறைந்த பட்சம் 10 நாட்களாக இருக்க வேண்டும் என பெரும்பான்மை பிஎஸ்சி உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டனர். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மூன்று பிஎஸ்சி உறுப்பினர்கள் பிரச்சாரத்துக்கு 21 நாட்கள் வழங்கப்பட வேண்டும் என விரும்பினர். அதனால் பெரும்பான்மை முடிவு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தேர்தலில் போட்டியிடும் எல்லாக் கட்சிகளுக்கும் ஊடகங்களில் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற பெர்சே கோரிக்கை பற்றிக் குறிப்பிட்ட பிஎஸ்சி, அதனை வழங்குவதற்கு தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சு தயாராக இருப்பதாக கூறியது.

சுதந்திரமான நேர்மையான தேர்தல்களை உறுதி செய்யவும் இசி நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் தேவைப்படும் விஷயங்களை ஆய்வு செய்ய கடந்த அக்டோபர் மாதம் பிஎஸ்சி அமைக்கப்பட்டது.

அதன் 73 பக்க இறுதி அறிக்கையில் 22 பரிந்துரைகள் அடங்கியுள்ளன.

இசி-யின் சுதந்திரத்தை வலுப்படுத்த அதற்கு சொந்த வரவு செலவுத் திட்டத்தை கொண்டிருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அது நேரடியாக நாடாளுமன்றத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

நீண்ட கால நடவடிக்கையாக இசி-யின் முக்கியப் பணிகளான- தேர்தலை நடத்துவது, வாக்காளர் பதிவை நடத்துவது, வாக்களிப்பு தொகுதிகளை ஆய்வு செய்வது- ஆகியவற்றைத் தனித் தனியாக  பிரிக்கலாம் என்றும் பிஎஸ்சி யோசனை தெரிவித்துள்ளது.

அந்த மூன்று பணிகளையும் சுயேச்சையான மூன்று அமைப்புக்கள் மேற்கொள்ளலாம்.

மற்ற பரிந்துரைகளில்:

மக்களவையில் உள்ள இடங்கள் எண்ணிக்கையை, தீவகற்ப மலேசியாவுக்கும் சபா சரவாக்கிற்கும் இடையில் சம நிலைப்படுத்துவதற்கான யோசனை ஆய்வு செய்வது. அந்த வகையில் மலேசியா அமைக்கப்பட்டபோது அரசாங்கங்களுக்கு இடையிலான குழு தயாரித்த நடைமுறைகளை பரிசீலினை செய்ய வேண்டும்.

‘ஒரு நபர் ஒரு வாக்கு’ என்ற கோட்பாட்டுக்கு உண்மையான அர்த்தத்தைக் கொடுக்கும் பொருட்டு கூட்டரசு அரசமைப்பின் 13வது பட்டியலை மறு ஆய்வு செய்வது, ஒரே மாநிலத்தில் எந்த ஒரு தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கையும் மற்ற தொகுதிகளிலிருந்து பெரிய அளவில் வேறுபட்டிருக்காமல் இருப்பதை உறுதி செய்ய நியாயமான வழிமுறையை தயாரிப்பது.