தாம் திவாலாகி விட்டதாக கோலா நெராங் பேராளர் அறிவித்துள்ளார்

உள்ளூர் வங்கி ஒன்றிடம் தாம் வாங்கிய 8 மில்லியன் ரிங்கிட் கடனை அடைக்க முடியாததால் தாம் திவாலாகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது என கெடா கோலா நெராங் சட்ட மன்ற உறுப்பினர்  சையட் சோப்ரி சையட் ஹஷிம் நேற்றிரவு தெரிவித்துள்ளார்.

1998ம் ஆண்டு புர்சா மலேசியா பங்குச் சந்தையின் இரண்டாவது பட்டியலில் தமது Kulim Enterprise Sdn Bhd நிறுவனத்தை சேர்ப்பதற்காக எடுத்த 50 மில்லியன் ரிங்கிட் கடனில் அது ஒரு பகுதி என அவர் சொன்னார்.

சையட் சோப்ரி பாடாங் தெராப் அம்னோ தொகுதி உதவித் தலைவரும் ஆவார்.

அலோர் ஸ்டாரில் நேற்றிரவு தமது இல்லத்தில் 300 கட்சி உறுப்பினர்களிடம் நிலமையை விளக்கிய அவர், அப்போது நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக பங்குப் பட்டியலில் அந்த நிறுவனத்தை சேர்க்க முடியவில்லை என்றார். அதனைத் தொடர்ந்து அந்தக் கடனுக்கு சையட் சோப்ரி பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தம்மை திவாலாகி விட்டதாக அறிவித்தது என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த விவகாரம் மீது தாம் புதன்கிழமையன்று கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக்கிடம் தெரிவித்து விட்டதாகவும் சையட் சோப்ரி சொன்னார். அம்னோ தலைவர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு விட்டது.

கெடா அரசமைப்பின் 47(1)(பி) பிரிவின் கீழ் திவால் என அறிவிக்கப்பட்ட மாநிலச் சட்ட மன்ற உறுப்பினர் ஒருவர் அந்தப் பதவியை இழந்து விட முடியும்.

2008ம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதன் முறையாக போட்டியிட்ட சையட் சோப்ரி பாஸ் வேட்பாளர் ஸவாவி அகமட்டை 805 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார்.

பெர்னாமா

TAGS: