அந்நியர்களை வாக்காளர்களாக மாற்றும் ‘பணிக்குழுவை’ பாஸ் கண்டு பிடித்துள்ளது

அந்நியர்களுக்குக் குடியுரிமை வழங்கி அவர்களை அடுத்த பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் செய்யும் ‘பணிக் குழு’ ஒன்றை அரசாங்கம் அமைத்துள்ளதைக் காட்டும் ஆதாரம் தம்மிடம் உள்ளதாக பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் இன்று கூறிக் கொண்டுள்ளார்.

பாஸ் கட்சியின் ஏடான ஹராக்கா டெய்லி ஏட்டில் வெளியான செய்தியில் அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  அந்தக் குழுவில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் உதவியாளர் ஒருவர், தேசிய பாதுகாப்பு மன்றம், தேசியப் பதிவுத் துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் முதுநிலை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களுடைய பெயர்களை உறுதி செய்யும் பொருட்டு மலேசியாகினி வெளியிடவில்லை.

“அரசியல் நெருக்குதலை பிஎன் அரசாங்கம் சமாளிக்க முடியவில்லை. அதனால் பிஎன் -னுக்கு வாக்களிக்க அந்நியர்களைக் கொண்டு வருவதின் மூலம் அதனைச் சமாளிக்க அது முயலுகிறது,” என அவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

அந்த ஆதாரம் (அதனை ஹராக்கா டெய்லி விவரிக்கவில்லை) அரச விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டிய கட்டாயத்தைக் கொண்டுள்ளது. அத்துடன் அதன் அறிக்கை தயாராகும் வரையில் தேர்தலும் நடத்தப்படக் கூடாது என மாஹ்புஸ் சொன்னார்.

பின்னர் நிருபர்களைச் சந்தித்த மாஹ்புஸ், அந்தத் தகவல் தமக்கு எப்படிக் கிடைத்தது என்பதையோ தமது கூற்றுக்கு ஆதாரத்தையோ தெரிவிக்க மறுத்து விட்டார்.

“அந்தத் தகவல் உள்ளுக்குள் இருந்து கிடைத்தது,” என்று மட்டும் அவர் சுருக்கமாகக் கூறினார்.

மாஹ்புஸ் சொல்லியிருப்பதை ஆதரித்த பாஸ் இளைஞர் தகவல் பிரிவுத் தலைவர் ரித்துவான் முகமட் நோர், அந்தக் குற்றச்சாட்டுக்கள் ‘மிகவும் கடுமையானவை,’ நாட்டின் இறையாண்மை சம்பந்தப்பட்டது என்றார்.

“மக்கள் நம்பிக்கைக்கு துரோகம் செய்யும் அரசாங்கத் தலைவர்கள் நமது நாட்டை அந்நிய வல்லரசுகளுக்கு எந்த நேரத்திலும் விற்று விடுவர் என்ற எண்ணத்தை அது ஏற்படுத்தியுள்ளது,” என்றார் அவர்.

கடந்த ஆண்டு பாஸ் போராளிகள், மை கார்டு மோசடியின் ஒரு பகுதி எனக் கூறப்பட்ட- பல பஸ்களில் வந்த அந்நியர்களை சுங்கை மெராப்-பில் உள்ள ஒய்வுத் தலம் ஒன்றில் மடக்கிப் பிடித்தனர்.

அந்த அந்நியர்கள் தொழில் முனைவர் பயிற்சிக்காக அங்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீஸ் பின்னர் கூறிக் கொண்டது.

TAGS: