மெர்தேக்கா சதுக்கம் அனைவருக்கும் சொந்தமானது, பிஎன் -னுக்கு மட்டுமல்ல

“மெர்தேக்கா சதுக்கம் அனைத்து மலேசியர்களுக்கும் சொந்தமானது. ஒழுங்காகவும் முறையாகவும் பெர்சே 3.0 நிகழ்வுகள் நடைபெறும் வரையில் அதனை ஏற்றுக் கொள்ளலாம்.”

நஸ்ரி: மெர்தேக்கா சதுக்கம் ஒன்று கூடுவதற்கான இடமாக அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்படவில்லை

ஜெரார்ட் லூர்துசாமி: மெர்தேக்கா சதுக்கம் ஒன்று கூடுவதற்கான இடமாக அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்படவில்லையா? என்ன வேடிக்கை? அரங்குகள் அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்படவில்லை. பொதுச் சதுக்கங்களும் பூங்காக்களும் அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்படவில்லை. சாலைகள் அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்படவில்லை. பின்னர் எங்குதான் ஒன்று கூடுவது? சந்திரனிலா?

2011ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்று கூடும் சட்டம் என அழைக்கப்படும் கேலிக் கூத்து இதுதான்.   தாம் திறந்த, தாராளப் போக்கைக் கொண்டவர் என்றும் சீர்திருத்தவாதி என்றும் மக்களையும் அந்நிய அரசாங்கங்களையும் ஏமாற்றுவதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பயன்படுத்திக் கொண்டு வெறும் குப்பையான சட்டமே அது.

மெர்தேக்கா சதுக்கம் கிடையாது என்றால் ஜாலான் டூத்தாவில் கட்டப்படுள்ள புதிய மிகப் பெரிய இஸ்தானா நெகாராவுக்கு வெளியில் மக்கள் ஒன்று திரண்டு பாசத்துக்குரிய நமது மாமன்னரிடம் மனுக் கொடுக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தையும் தேர்தல் ஆணையத்தையும் தங்களது ரப்பர் முத்திரைகளாக அம்னோவும் பிஎன் -னும் பயன்படுத்திக் கொண்டு நடத்தும் ஆட்டங்களைக் கண்டு நாங்கள் வெறுப்படைந்து விட்டோம்.

அவர்கள் அதிகாரத்தை எப்போதும் நிரந்தரமாக வைத்திருக்க விரும்பினால் நாடாளுமன்றத்தையும் தேர்தல்களையும் ரத்துச் செய்து விடுங்கள். சர்வாதிகாரிகளை போல ஆட்சி செய்யுங்கள்.

கேஏஐ: “அந்த இடத்தை ஒன்று கூடுவதற்கு, அதுவும் அமைதியாகக் கூடுவதற்குக் கூட பயன்படுத்தக் கூடாது” என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் சொல்கிறார்.

அப்படி என்றால் தேசிய நாளன்றும் புத்தாண்டுக்கு முதல் நாளும் மக்கள் ஏன் அங்கு கூடுகின்றனர்?

டாக்டர் பிஎம்: சுதந்தரமான, நியாயமான தேர்தல்கள் குறித்த  தங்கள் கருத்துக்களை வெளியிட பெர்சே 3.0 பங்கேற்பாளர்கள் மெர்தேக்கா சதுக்கத்தில் கூட முடியாது என்றால் ஏன் வார இறுதியில் மக்கள் அங்கு கூடி விழாக்களை நடத்துகின்றனர்?

அந்த நிகழ்வுகளுக்கு வசதியாக ஜாலான் ராஜாவை போலீஸும் மாநகராட்சி மன்றமும் மூடி விடுகின்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்களும் அவதிப்படுகின்றனர். வர்த்தகமும் பாதிக்கப்படுகின்றது. அந்த நிகழ்வுகள் சட்டப்பூர்வமானவையா?

இல்லை என்றால் நாட்டின் தேர்தல் முறையைத் தூய்மையாக்க முயலும் பெர்சே பேரணி எப்படி சட்ட விரோதமாகும் என்பதை தயவு செய்து விளக்குங்கள். வெவ்வேறு வகையான மக்களுக்கு வெவ்வேறு வகையான சட்டங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது.

கறுப்பு: பல நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படும் வகையில் மெர்தேக்கா சதுக்கம் கட்டப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சிகளுக்கும் சொற்பொழிவுகளுக்கும் விருந்துகளுக்கும், கண்காட்சிகளுக்கும் விளையாட்டுக்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் குடும்ப தின நிகழ்வுகளுக்கும் அதனை பயன்படுத்தலாம்.

மெர்தேக்கா சதுக்கம் அனைவருக்கும் சொந்தமானது, பிஎன்-அம்னோவுக்கும் மட்டும் கட்டப்படவில்லை. ஒழுங்காகவும் முறையாகவும் பெர்சே 3.0 நிகழ்வுகள் நடைபெறும் வரையில் அதனை ஏற்றுக் கொள்ளலாம்.

பொது இசை நிகழ்ச்சிகள், விவாதங்கள், சொற்பொழிவுகள், அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்குமான நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒர் நிகழ்வுக்கு பெர்சே ஏற்பாடு செய்ய வேண்டும். உணவு, சுவை பான விற்பனைக் கடைகளை வைக்கவும். சமையல் போட்டி, விளையாட்டுப் போட்டி, புகைப் படப் போட்டிகள் ஆகியவற்றைக் கூட நடத்தலாம்.

அப்போது 100,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் ஏப்ரல் 28ம் தேதி பிற்பகல் நேரத்தை அற்புதமாக கொண்டாடலாம். ஏற்பாட்டாளர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

TAGS: